தனியார் குடிநீர் நிறுவனத்தில் ரூ.5 லட்சம் திருட்டு
தூத்துக்குடி அருகே தனியார் குடிநீர் நிறுவனத்தில் ரூ.5 லட்சம் திருடப்பட்டது.
தூத்துக்குடி அருகே தனியார் குடிநீர் நிறுவனத்தில் ரூ.5 லட்சத்தை திருடி சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருட்டு
தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோட்டை சேர்ந்தவர் சாமுவேல் (வயது 39). இவர் தூத்துக்குடி அருகே வடக்கு காலாங்கரை ரோட்டில் குடிநீர் உற்பத்தி நிலையம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தை வழக்கம் போல் பூட்டி விட்டு சென்றார்களாம். நேற்று முன்தினம் காலையில் பார்த்த போது, நிறுவன அலுவலகத்தில் இருந்த பணப்பெட்டியை யாரோ மர்ம நபர் உடைத்து ரூ.5 லட்சம் பணத்தை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
விசாரணை
இது குறித்து சாமுவேல் புதுக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் நிறுவனத்தின் பின்பக்க கிரில் கேட்டை யாரோ மர்ம நபர் உடைத்து நிறுவனத்தின் உள்ளே நுழைந்து உள்ளார். பின்னர் அங்கு இருந்த கண்ணாடி கதவையும் உடைத்து உள்ளார். அங்கு அலுவலக அறையில் இருந்த சுமார் 2 அடி உயரம் கொண்ட பணப்பெட்டியை உடைத்து, அதில் இருந்த சுமார் ரூ.5 லட்சம் ரொக்கப்பணத்தை மர்ம நபரை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் மர்மநபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.