பல்பொருள் அங்காடியில் டி.வி.க்கள் திருட்டு
போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில் விலை உயர்ந்த டி.வி.க்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில் விலை உயர்ந்த டி.வி.க்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம்
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் போலீசாருக்கான தமிழ்நாடு காவலர் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகின்றது.
இந்த பல்பொருள் அங்காடியில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் தங்களது அடையாள அட்டையை காண்பித்து பொருட்கள் வாங்கிச் செல்வது வழக்கம். இதில் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள், செல்போன், டி.வி. உள்பட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் பல்பொருள் அங்காடியை அங்கு பணிபுரியும் போலீசார் திறக்க சென்றனர். அப்போது அங்காடியின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு ேகமராக்கள் முகம் தெரியாதவாறு திருப்பி வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
டி.வி.க்கள் திருட்டு
இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். அப்போது அங்காடியில் இருந்து விலை உயர்ந்த 3 எல்.இ.டி. டி.வி.க்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
மேலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் பின்புறம் உள்ள மதில் சுவரை தாண்டி உள்ளே வந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தினர். அப்போது மோப்ப நாய் மதில் சுவர் வரை சென்று நின்றது.
இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.