தேனி பஸ் நிலைய கடைகளில்முத்திரையிடாத 9 தராசுகள் பறிமுதல்
தேனி பஸ் நிலைய கடைகளில் முத்திரையிடாத 9 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தேனி புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் பழக்கடைகளில் தேனி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மனுஜ் ஷியாம் சங்கர் தலைமையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். எடைக்குறைவு மற்றும் அரசு முத்திரை, மறுமுத்திரையிடாத எடையளவுகளை பயன்படுத்தி பழங்கள் விற்பனை செய்வது தொடர்பாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், தொழிலாளர் உதவி ஆய்வாளர் கருப்பையா மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். இந்த ஆய்வின் போது, முத்திரையிடாத மற்றும் மறுமுத்திரையிடாத 7 மின்னணு தராசுகள், 2 மேஜை தராசுகள், 9 இரும்பு எடைக்கற்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல், தேனி மாவட்டத்தில் ஊதுவர்த்தி தயாரிக்கும் தொழிற்கூடங்களில் திடீர் ஆய்வு நடத்தினர். குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்களா? என்பதை கண்டறிய இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு நடத்திய இடங்களில் முரண்பாடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை.