தேனி கலெக்டர் அலுவலகத்தில்அரசு ஊழியர்களின் குழந்தைகள் கவனிப்பு மையம்:கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார்


தேனி கலெக்டர் அலுவலகத்தில்அரசு ஊழியர்களின் குழந்தைகள் கவனிப்பு மையம்:கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 19 Aug 2023 12:15 AM IST (Updated: 19 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்களின் குழந்தைகள் கவனிப்பு மையத்தை கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார்.

தேனி

குழந்தைகள் கவனிப்பு மையம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 3-வது தளத்தில், அரசு ஊழியர்களின் குழந்தைகள் கவனிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் தொடக்க விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷஜீவனா இந்த மையத்தின் செயல்பாட்டை தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது கலெக்டர் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசின் அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு அரசின் சார்பில் மகப்பேறு விடுப்பு 12 மாதங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மகப்பேறு விடுப்பு முடிந்து பணியில் சேரும், ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி அல்லது இருவரும் அரசு ஊழியர்களாக பணிபுரியும் பட்சத்தில் அவர்களின் குழந்தைகளை கவனித்து கொள்ள இயலாத நிலை ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையை தவிர்ப்பதற்காக, மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம் என மாவட்ட பெருந்திட்ட வளாகத்துக்கு உட்பட்ட அலுவலகங்களில் பணிபுரியும் அரசு பெண் ஊழியர்களின் நலன் கருதி, அவர்களின் 1 வயது முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் பராமரிப்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்த குழந்தை கவனிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. குளிரூட்டப்பட்ட மற்றும் தொலைக்காட்சி வசதியுடன் இந்த மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மாதக்கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.

குறும்படங்கள்

இக்குழந்தைகள் கவனிப்பு மையம் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். இதில் குழந்தைகளுக்கு தொலைக்காட்சி மூலம் அறிவு சார்ந்த குறும்படங்கள், விளையாட்டு குறும்படங்கள் ஒளிபரப்பப்படும். மேலும், கல்வி கற்பிக்கும் உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்களுடன், குழந்தைகளை கண்காணித்து கொள்ள 2 அங்கன்வாடி பணியாளர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மையத்தில் குழந்தைகளுக்கு பால் மற்றும் பழங்கள் தினமும் வழங்கப்பட உள்ளது. வாரம் ஒரு முறை குழந்தைகளுக்கு சுழற்சி முறையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள மருத்துவ குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிந்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு மாவட்ட திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story