தேனி கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர் தர்ணா
தேனி கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்
போடி அருகே போ.மீனாட்சிபுரம் பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றுபவர் பரமசிவம். இவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து அவர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர், அவரை பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
பேரூராட்சிகள் உதவி இயக்குனர் (பொறுப்பு) ராஜாராமிடம் அவர் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், "நான் பணியிட மாறுதல் கேட்டு கலெக்டரிடம் 5 முறை மனு கொடுத்துள்ளேன். எனக்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை. மேலும் என்னை எந்த முகாத்திரமும் இல்லாமல். பேரூராட்சி செயல் அலுவலர் 15 நாட்களாக பணிக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்துள்ளார். தவறு செய்யாத என்னை தண்டிப்பதால் மன உளைச்சல் அதிகமாகி உள்ளது. எனவே, எனக்கு பணி மாறுதல் செய்து உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார். பின்னர் அவருக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.