தேனி கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்து மூதாட்டி தர்ணா
தேனி கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்து மூதாட்டி தர்ணா போராட்டம் நடத்தினார்
கோம்பையை சேர்ந்த தம்பித்துரை மனைவி பொன்னுத்தாய் (வயது 60). இவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்தார். அப்போது கூட்டம் நடந்த அரங்குக்கு வெளியே நின்ற போலீசார், பொன்னுத்தாய் கையில் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதற்குள் ஒரு பாட்டிலில் மண்எண்ணெய் இருந்தது. தீக்குளிப்பதற்காக அதை எடுத்து வந்ததாக அவர் கூறினார். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர், "நான் வசித்து வரும் எனது வீட்டை உறவினர்கள் சிலர் அபகரிக்க முயற்சி செய்கிறார்கள். என்னையும், எனது கணவரையும் வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சி செய்கிறார்கள். இதுகுறித்து ஏற்கனவே மனு கொடுத்தும் தீர்வு கிடைக்காததால் தீக்குளிக்க மண்எண்ணெய்யுடன் வந்தேன்" என்றார். பின்னர் அங்கிருந்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். ஆனால், அவர் அங்கு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவருடைய வீட்டுக்கு கிராம நிர்வாக அலுவலர் நேரில் வந்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் அவர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.