தேனி டாக்டர் வீட்டில் 16½ பவுன் திருடிய தெலுங்கானா கொள்ளையனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை


தேனி டாக்டர் வீட்டில் 16½ பவுன் திருடிய  தெலுங்கானா கொள்ளையனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை
x

தேனி டாக்டர் வீட்டில் திருடிய வழக்கில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளையனை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது.

தேனி

டாக்டர் வீட்டில் திருட்டு

தேனி கே.ஆர்.ஆர். நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் டாக்டர் பாப்புசாமி. இவர் ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருடைய மனைவி ஜெயராணி (வயது 70) தனது வீட்டில் வசித்து வந்தார். அவருடைய மகள் அஸ்வத்தமா அமெரிக்காவில் இருந்து சொந்த ஊருக்கு வந்து இருந்ததால், கடந்த மாதம் 14-ந்தேதி ஜெயராணி வீட்டை பூட்டிவிட்டு தனது மகளுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று விட்டார். 2 நாட்கள் கழித்து தேனிக்கு திரும்பிய போது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 16½ பவுன் நகைகள், வெள்ளிக் கொலுசு மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து ஜெயராணி கொடுத்த புகாரின் பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதே நாளில், அதே பகுதியில் மேலும் 2 வீடுகளில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இந்த சம்பவங்களை தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

தெலுங்கானா கொள்ளையன்

அப்போது அதில் கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது. இதையடுத்து அதில் பதிவான நபரின் புகைப்படத்தை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தமிழகத்தின் பிற போலீஸ் நிலையங்களுக்கும் அந்த புகைப்படத்தை அனுப்பி விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய புலன் விசாரணையில், அந்த புகைப்படத்தில் உள்ள நபர் தெலுங்கானா மாநிலம், வாரங்கால் பகுதியில் உள்ள கொரகொண்டா கீர்த்தி நகரை சேர்ந்த தேவேந்தர் மகன் செட்டிமணி என்ற மணிமாறன் (39) என்பதும், தேனியில் திருடிவிட்டு ஈரோடு பகுதியில் மற்றொரு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டபோது அவரை போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்துள்ளதாகவும் தெரியவந்தது.

காவலில் எடுத்து விசாரணை

இதையடுத்து கோவை சிறையில் உள்ள செட்டிமணி என்ற மணிமாறனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிகேட்டு தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை மாஜிஸ்திரேட்டு லலிதா ராணி முன்னிலையில் இன்று நடந்தது. இதற்காக கோவை சிறையில் இருந்து செட்டிமணியை போலீசார் பாதுகாப்பாக அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும், விசாரணை முடிந்து வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து செட்டிமணியை போலீசார் காவலில் எடுத்து நேற்று மாலையில் விசாரணையை தொடங்கினர்.


Next Story