சேரன்மாதேவி ராமசாமி கோவிலில் தெப்பத் திருவிழா
சேரன்மாதேவி ராமசாமி கோவிலில் தெப்பத் திருவிழா நடந்தது.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி தாமிரபரணி ஆற்றின் நதிக்கரையில் அமைந்துள்ளது பக்தவச்சல பெருமாள், மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் நவநீதகிருஷ்ண சுவாமி கோவில்கள். இதில் பித்ரு தோஷ நிவர்த்தி ஸ்தலமாக திகழும் பக்தவச்சல பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் தீர்த்தவாரி விழா விமரிசையாக நடைபெறும்.
வியதிபாத நாளன்று அதிகாலையில் நடைபெறும் தீர்த்தவாரியில் கலந்து கொண்டு பக்தவச்சல பெருமாளை வேண்டினால் முன்னோர்கள் செய்த பாவங்கள் நீங்கி அவர்கள் முக்தி அடைவார்கள் என்பது ஐதீகம். இந்த ஆண்டுக்கான தீர்த்தவாரி நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு பக்தவச்சல பெருமாள், நவநீதகிருஷ்ண சுவாமி, மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடந்தபோது, காஞ்சீபுரத்தைச் சேர்ந்த மதுசூதனன் (வயது 45) உள்பட 3 பேர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். உடனே அங்கு பணியில் இருந்த சேரன்மாதேவி தீயணைப்பு நிலைய வீரர்கள் துரிதமாக செயல்பட்டு, நீரில் வெகு தூரம் நீந்திச் சென்று 3 பேரையும் பத்திரமாக மீட்டனர். இதற்காக தீயணைப்பு வீரர்கள் சுப்பிரமணியன், மாரி ராஜா, ஷேக் முகமது கான், ரமேஷ், சக்திவேல் மற்றும் மாடசாமி ஆகியோரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
சேரன்மாதேவி பேரூராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள ராமசாமி கோவிலில் தெப்பத் திருவிழா நடந்தது. இதையொட்டி, காலை 9 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 12 மணிக்கு சாற்றுமுறை தீர்த்தம் முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு ராமர் வீதிஉலா, இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவ திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை சேரன்மாதேவி பக்த பேரவையினர் சிறப்பாக செய்திருந்தனர்.