ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,122 வாக்குச்சாவடிகள் உள்ளன
திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,122 வாக்குச்சாவடிகள் உள்ளதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,122 வாக்குச்சாவடிகள் உள்ளதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்குச்சாவடி மறு சீரமைப்பு இறுதி பட்டியல் குறித்து அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
கடந்த 1.9.22-ந் தேதி வரை வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது. இப்பட்டியல் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களிலும் வெளியிடப்பட்டது. இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியலின் மீது அரசியல் கட்சிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், குடியிருப்போர் நல சங்க உறுப்பினர்கள் யாருக்கேனும் ஆட்சேபனை அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனில் தங்களது எழுத்துப்பூர்வமான கடிதங்களை வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலருக்கு 7 நாட்களுக்குள் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.
1,122 வாக்குச்சாவடிகள்
அதன் அடிப்படையில் பெறப்பட்ட மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்டு, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வாக்குச்சாவடி பட்டியலில் மாற்றங்கள் செய்து வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு உள்ளிட்ட தொகுதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னர் இறுதியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 1,122 வாக்குச்சாவடிகள் இடம் பெற்றுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் மறு சீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடி விவரங்கள் குறித்து ஆட்சேபனைகள் ஏதும் உள்ளதா? என அரசியல் கட்சி பிரமுகர்களிடம் கேட்டதற்கு, அவர்கள் ஆட்சேபனை ஏதும் தெரிவிக்காமல் பட்டியலை அங்கீகரித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், தேர்தல் தாசில்தார் ஜெயக்குமார், அனைத்து தாசில்தார்கள், அங்கீகரிக்கப்பட்ட அவசியல் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.