தூத்துக்குடியில் பள்ளிக்கூட மாணவிகள் 3 பேர் விஷம்குடித்து தற்கொலை முயற்சி


தூத்துக்குடியில் பள்ளிக்கூட மாணவிகள் 3 பேர்  விஷம்குடித்து தற்கொலை முயற்சி
x

தூத்துக்குடியில் பள்ளிக்கூட மாணவிகள் 3 பேர் விஷம்குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பள்ளிக்கூட மாணவிகள் 3 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். அந்த மாணவிகளுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தற்கொலை முயற்சி

தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வரும் 13 வயது நிரம்பிய 3 மாணவிகள் நெருங்கிய தோழிகளாக இருந்தனர். அவர்களை அந்த பள்ளிக்கூடத்தில் பணியாற்றி வந்த ஒரு ஆசிரியை அடிக்கடி சத்தம் போட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று ஒரு மாணவியின் சகோதரரை பார்த்து விட்டு 3 மாணவிகளும் வந்தார்களாம். இதனை பார்த்த ஆசிரியை மாணவிகளை கண்டித்து உள்ளார். இதில் மனம் உடைந்த 3 மாணவிகளும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளனர். தொடர்ந்து 2 மாணவிகள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியிலும், ஒரு மாணவி தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அரசு ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவர் சைலஸ்ஜெயமணி மற்றும் டாக்டர்கள் மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

இதனை அறிந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கூடத்துக்கு வந்து புகார் தெரிவித்தனர்.

விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், தாசில்தார் செல்வக்குமார், தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி மற்றும் அதிகாரிகள் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தினரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி கூறும் போது, விஷம் சாப்பிட்டதாக 2 மாணவிகள் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் நலமுடன் உள்ளனர் என்று கூறினார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story