மைதானங்கள் இருக்கு... விளையாட முடியலீங்க...


மைதானங்கள் இருக்கு... விளையாட முடியலீங்க...
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மைதானங்கள் இருக்கு... விளையாட முடியலீங்க...

கோயம்புத்தூர்

'ஓடி விளையாடு பாப்பா' என்ற பாரதியாரின் வரிகள் மூலம் விளையாட்டின் முக்கியத்துவத்தை அறிந்தவர் பலரும் உண்டு. ஆனால் பொள்ளாச்சி பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஓடி விளையாடுவதற்கு மைதானங்கள் எதுவும் சரிவர இல்லை. இருக்கும் மைதானங்களும், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், விளையாட்டு துறையில் பொள்ளாச்சி சிறந்து விளங்க முடியாத நிலையில் உள்ளது.

விளையாட்டு துறை

தென்னிந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற பகுதி பொள்ளாச்சி ஆகும். இதற்கு காரணம், அரசியல் முதல் சினிமா வரை அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கியதால்தான். அப்படிப்பட்ட பொள்ளாச்சி தற்போது மைதானங்கள் இல்லாததால் விளையாட்டு துறையில் பின்னோக்கி செல்வது வேதனை அளிப்பதாக வீரர், வீராங்கனைகள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொள்ளாச்சி தடகள சங்க செயலாளர் சுரேஷ் கூறியதாவது:-

கடந்த 2015-ம் ஆண்டு வரை விளையாட்டு இட ஒதுக்கீட்டில் பொள்ளாச்சியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் ராணுவம், போலீஸ், உயர் கல்விக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்போது 2 சதவீத மாணவர்கள் கூட தேர்ச்சி பெறுவது இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் குறுமைய விளையாட்டு போட்டியில் இருந்து மாவட்டத்திற்கு தேர்ச்சி பெற்று செல்பவர்களில் 70 சதவீதம் பேர் அரசு பள்ளி மாணவ-மாணவிகளாக இருந்தனர். ஆனால் இன்றைய போட்டிகளில் வெறும் 40 சதவீத மாணவர்கள் தான் கலந்துகொள்கின்றனர். இதில் 10 சதவீதம் பேர் தான் தேர்ச்சி பெறுகின்றனர். இதில் 2 சதவீதம் பேர் மாவட்டத்தில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுகின்றனர்.

மைதானத்தில் கழிவுகள்

இங்கு 150 பள்ளி, கல்லூரிகள் இருந்தும் ஒரு சிலர் மட்டுமே மாநில போட்டிக்கு தேர்ச்சிபெறுகின்றனர். இதற்கு போதிய மைதான வசதி, உபகரணங்கள் இல்லாதது தான் காரணமாகும். திறமையான மாணவர்கள் இருந்தும் பயிற்சி அளிக்க மைதானம் இல்லாததால் விளையாட்டு திறமை குறைந்து விடுகிறது. இருக்கிற மைதானங்களிலும் கட்டிட கழிவுகள் கொட்டி பாழாகி விட்டது. பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மைதானமும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார கிராமப்புற மாணவர்கள் மாநில, தேசிய, உலக அளவிலான போட்டிகளில் சாதிக்க வசதியாக விளையாட்டு மைதானத்தை உருவாக்கி கொடுக்க வேண்டும்.

தனியாரிடம் கட்டணம்

கால்பந்து வீரர் அருண்:

கால்பந்து விளையாடுவதற்கும், பயிற்சி பெறுவதற்கும் பொள்ளாச்சி பகுதியில் எந்த மைதானமும் இல்லை. சமத்தூர் ராம ஐய்யங்கார் நகராட்சி பள்ளி மைதானத்தில் விளையாடி வந்தோம். தற்போது அங்கு ஸ்கேட்டிங் மைதானம், அரசு கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதனால் தனியார் மைதானங்களில் ஒரு அணிக்கு ரூ.1,000 வீதம் கட்டணம் கட்டி விளையாடி வருகிறோம். ஆனால் முறையான பயிற்சி இல்லாததால் போட்டிகளில் சாதிக்க முடியவில்லை. பொள்ளாச்சி, தனி மாவட்டமாக உருவாக்கும் அளவிற்கு தரம் உயர்ந்தும், மைதானங்கள் இல்லாதது வேதனை அளிப்பதாக உள்ளது.

உபகரணங்கள் இல்லை

பள்ளி மாணவர் நவீன்:

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கல்வியில் மட்டுமல்ல விளையாட்டுகளிலும் சாதிக்கும் திறமை உள்ளது. ஆனால் பெரும்பாலான பள்ளி மைதானங்கள் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. மேலும் பயிற்சி பெறுவதற்கு உபகரணங்களும் இல்லை. இதனால் மைதானங்கள் இருக்கு...விளையாட முடியலீங்க... என்ற நிலை காணப்படுகிறது. தடகளம் போன்ற போட்டிகளில் பயிற்சி பெறுவதற்கு கோவைக்கு செல்ல வேண்டி உள்ளது. கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை, எளிய மாணவர்களால் கோவைக்கு சென்று பயிற்சி மேற்கொள்வது என்பது சிரமமானதாகும். எனவே பொள்ளாச்சியில் விளையாட்டு மைதானம் அமைத்து கொடுத்தால் அரசு பள்ளி மாணவ-மாணவிகளும் அனைத்து போட்டிகளிலும் சாதிக்க முடியும்.

சர்வதேச தரத்தில்...

கல்லூரி மாணவி திவ்யா:

பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சமத்தூர் ராம ஐய்யங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மைதானங்களில் ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மைதானம் பயன்படுத்த முடியாத நிலையில் மோசமாக உள்ளது. தடகளம், கபடி, கிரிக்கெட், கைப்பந்து உள்ளிட்ட போட்டிகளில் கலந்துகொள்பவர்கள் பயிற்சி பெறுவதற்கு மைதானங்கள் இல்லை.

அரசியல் கட்சியினர் ஒவ்வொரு தேர்தலின்போதும் பொள்ளாச்சியில் சர்வதேச தரத்தில் மைதானம் உருவாக்கப்படும் என்று கூறுகின்றனர். ஆனால் அவை வாக்குறுதிகளாக மட்டுமே உள்ளது. எனவே அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story