பகுதிநேர ரேஷன் கடைகள் அதிகமாக உள்ளன
தமிழ்நாட்டிலேயே ராணிப்பேட்டை மாவட்டத்தில்தான் அதிக பகுதிநேர ரேஷன் கடைகள் உள்ளதாக அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
தமிழ்நாட்டிலேயே ராணிப்பேட்டை மாவட்டத்தில்தான் அதிக பகுதிநேர ரேஷன் கடைகள் உள்ளதாக அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
திறப்பு விழா
ராணிப்பேட்டை அருகே உள்ள செட்டித்தாங்கல் ஊராட்சியில், வள்ளலார் நகரில், ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் இருந்து ரூ.14 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரேஷன் கடையை திறந்து வைத்து, பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
அதிக ரேஷன் கடைகள்
இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தற்போது பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையின் மூலம் வள்ளலார் நகர் பகுதியில் வசித்து வரும் 980 குடும்பத்தினர் பயன் பெறுவார்கள். தமிழ்நாட்டிலேயே அதிகமான பகுதி நேர ரேஷன் கடைகள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தான் உள்ளது.
புதிய பகுதி நேர ரேஷன் கடைகள் திறப்பதற்கு அரசு சில நிபந்தனைகளை வகுத்துள்ளது. அதனடிப்படையில் மக்களின் நியாயமான கோரிக்கையினை ஏற்று கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்ட பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. முன்பு இருந்த ஆட்சிக்காலத்தில் வழங்கிய உணவுப் பொருட்களின் தரத்தை காட்டிலும் தற்போது தரமான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்கள் மண்டல இணைப் பதிவாளர் சரவணன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக் குழுத்தலைவர் சேஷா வெங்கட், துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட உராட்சிக்குழு உறுப்பினர் செல்வம், மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை, ஒன்றியக் குழு உறுப்பினர் பரிமளா, தாசில்தார் நடராஜன், ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.