அரசு பாதுகாப்பு இல்லத்தில் ரகளையில் ஈடுபட்ட சிறுவர்களால் பரபரப்பு
அரசு பாதுகாப்பு இல்லத்தில் ரகளையில் ஈடுபட்ட சிறுவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தப்பி ஓடிய 6 பேரையும் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அரசு பாதுகாப்பு இல்லத்தில் ரகளையில் ஈடுபட்ட சிறுவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தப்பி ஓடிய 6 பேரையும் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தப்பியோட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆற்காடு சாலையோரம் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் அரசினர் பாதுகாப்பு இல்லம் இயங்கி வருகிறது. இங்கு வழிப்பறி, திருட்டு, கொள்ளை, கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை விதிக்கப்பட்ட 18 வயதுக்கு உட்பட்ட 42 சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணி அளவில் வழக்கம் போல் இல்ல பாதுகாப்பு பணியில் குமரவேலு, பிரபு உள்பட 4 பேர் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் சிறுவர்களுக்கு உணவு அளித்தனர். இதையடுத்து அவர்களை அங்குள்ள அறைகளுக்கு அனுப்பி கதவினை பூட்ட முயன்றனர்.அப்போது சென்னை சிறுவன் உள்பட 6 பேர் அறையை விட்டு வெளியே வந்தனர். அவர்கள் திடீரென கை மற்றும் கட்டையால் சரமாரியாக ஒரு காவலாளியை தாக்கினர். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த மற்ற காவலாளிகளையும் அவர்கள் சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். இதையடுத்து அங்கு போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பு இல்லத்தின் முன்பு 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரகளை
இந்த நிலையில் நேற்று பாதுகாப்பு இல்லத்தில் சமூக நலத்துறையை சேர்ந்த சென்னையில் இருந்து துணை இயக்குனர் கஸ்தூரி வந்து ஆய்வு செய்தார். இதேபோல வேலூர் உதவி கலெக்டர் கவிதாவும் ஆய்வு செய்தார்.
இதனிடையே நேற்று அங்கு ஏ பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ள 28 சிறுவர்களில் 14 பேர் கலாட்டாவில் ஈடுபட்டதாகவும், அவர்கள் அங்குள்ள மேஜை உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து அவர்கள் மீது வேலூர் வடக்கு போலீசில் பாதுகாப்பு இல்ல கண்காணிப்பாளர் விஜயகுமார் புகார் செய்துள்ளார். அதன்பேரில் 12 சிறுவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
விளையாட அனுமதிக்கவில்லை
சிறுவர்கள் தகராறில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து நேற்று முன்தினம் 6 சிறுவர்கள் தப்பியோடினர். அதன்காரணமாக அங்குள்ள மற்ற சிறுவர்களை விளையாடுவதற்கு அனுமதிக்கவில்லை. அதனால் அவர்கள் ஆத்திரத்தில் பாதுகாப்பு இல்லத்தில் உள்ள பொருட்களை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றனர்.
இதனிடையே தப்பியோடிய 6 பேரையும் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தப்பியோடியவர்கள் சென்னை, திருநெல்வேலி, கடலூர் போன்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று தனிப்படை போலீசார் அந்தந்த மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். மேலும் நகரில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள், காட்பாடி ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் ஆய்வு செய்து சிறுவர்களை போலீசார் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.