முதியவரை தூக்கி வீசிய மக்னா யானையால் பரபரப்பு
சுல்தான்பத்தேரிக்குள் புகுந்த மக்னா யானை முதியவரை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.
கூடலூர்,
சுல்தான்பத்தேரிக்குள் புகுந்த மக்னா யானை முதியவரை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.
மக்னா யானை
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவாலா சுற்றுவட்டார பகுதிகளில் மக்னா (பி.எம்.2.) யானை வீடுகள், கடைகளை உடைத்து சேதப்படுத்தியது. கடந்த நவம்பர் மாதம் வீட்டில் இருந்த பாப்பாத்தி என்ற பெண்ணை தாக்கி கொன்றது. இதைத் தொடர்ந்து கால்நடை மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தி கடந்த டிசம்பர் மாதம் 8-ந் தேதி மக்னா யானையை பிடித்தனர். பின்னர் அதன் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தி, முதுமலை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.
இதனிடையே 2 வாரத்துக்கு பிறகு மக்னா யானை, வாழைத்தோட்டம் மசினகுடி வழியாக முதுமலை தெப்பக்காடு பகுதிக்கு இடம்பெயர்ந்தது.
இதனால் வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, கூடலூருக்குள் புகாமல் இருக்க தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் காட்டு யானை கர்நாடகா எல்லைக்குள் சென்றது.
முதியவரை தூக்கி வீசியது
இந்தநிலையில் முதுமலை புலிகள் காப்பக எல்லையில் உள்ள கேரள மாநில வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி நகருக்குள் நேற்று அதிகாலை மக்னா யானை புகுந்தது. இதை பார்த்த பொதுமக்கள் சிலர் அலறி அடித்து ஓடினர். அப்போது சாலையோர நடைபாதையில் படுத்து கிடந்த ஆதரவற்ற முதியவர் ஒருவர் யானை வருவதை கண்டு எழுந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் யானை அவரை துதிக்கையால் ஆக்ரோஷத்துடன் தூக்கி வீசியது.
இதனால் அவர் காயத்துடன் அங்கிருந்து ஓடினார். இதனிடையே அந்த வழியாக வந்த பஸ்சை மக்னா யானை தாக்க முயன்றது. ஆனால், டிரைவர் பஸ்சை வேகமாக ஓட்டியதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்தநிலையில் சுல்தான்பத்தேரி போலீசார் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து காட்டு யானையை பிடிப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர். சுல்தான்பத்தேரிக்குள் புகுந்து யானை முதியவரை தூக்கி வீசியது, பஸ்சை தாக்க முயன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.