நெல்லை நகருக்குள் புகுந்த காட்டெருமையால் பரபரப்பு
நெல்லை நகருக்குள் புகுந்த காட்டெருமையால் பரபரப்பு ஏற்பட்டது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் வனத்துறையினர் அந்த காட்டெருமையை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
நெல்லை நகருக்குள் புகுந்த காட்டெருமையால் பரபரப்பு ஏற்பட்டது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் வனத்துறையினர் அந்த காட்டெருமையை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
காட்டெருமை
நெல்லை நகரின் மையப்பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் 40-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் நகருக்குள் புகுந்த காட்டெருமை ஒன்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றித்திரிவதாக ரோந்து பணியில் இருந்த போலீசார், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறை ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் போலீசாருடன் இணைந்து காட்டெருமையை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், காட்டெருமையை கண்டுபிடிக்க முடியவில்லை. அது அருகில் உள்ள புதர் மண்டிய பகுதிக்குள் நுழைந்து இருக்கலாம் என சந்தேகத்தில் அதை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு
இதற்கிடையே, காட்டெருமை எங்கிருந்து வந்தது? என்பது குறித்து அறிய மாநகர பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
இதில், இந்த காட்டெருமை நேற்று முன்தினம் இரவு சமாதானபுரம் பகுதியிலும் சுற்றி திரிந்துள்ளது. அங்கிருந்து வண்ணார்பேட்டை வழியாக கொக்கிரகுளம், நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள பூக்கடை பகுதிகளில் புகுந்துள்ளது. அங்கிருந்து நெல்லை சந்திப்பு பகுதியில் காட்டெருமை உலா வந்துள்ளது.
நெல்லை வண்ணார்பேட்டை பகுதி மற்றும் பாளையங்கோட்டை பகுதிகளில் காட்டெருமை உலா வந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
தேடும் பணி தீவிரம்
நேற்று 2-வது நாளாக மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின் பேரில் வனச்சரகர் சரவணகுமார், வனவர் அழகர்ராஜ், வனக்காப்பாளர் மதியழகன் மற்றும் அதிரடி மீட்புக்குழுவினர், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் சேர்ந்து காட்டெருமையை பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.
நேற்று காலையில் இந்த குழுவினர் நெல்லை வண்ணாரப்பேட்டை அரசு சுற்றுலா மாளிகையையொட்டி உள்ள மரங்கள் அடர்ந்த ஆற்றுப்பகுதியில் தொடங்கி கீழநத்தம் வரை தொடர்ச்சியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
எங்கிருந்து வந்தது?
களக்காடு புலிகள் காப்பக பகுதியான சேரன்மாதேவி கொழுந்து மாமலை பகுதியில் இருந்து இந்த காட்டெருமை வந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
இருந்தாலும் காட்டெருமையை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காட்டெருமை நகருக்குள் புகுந்து உள்ளதால் நெல்லையில் பரபரப்பு நிலவுகிறது.