மணல் அரிப்பால் தென்பெண்ணையாற்று பாலம் உடையும் அபாயம்
விழுப்புரம் அருகே பிடாகத்தில் மணல் அரிப்பால் தென்பெண்ணையாற்று மேம்பாலம் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதனை விரைந்து சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
விழுப்புரம் அருகே பிடாகம் பகுதியில் ஓடும் தென்பெண்ணையாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் கட்டப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.
தென்மாவட்டங்களை இணைக்கும் முக்கிய மேம்பாலமாக இது உள்ளதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான இலகுரக வாகனங்கள், கனரக வாகனங்களும் இந்த மேம்பாலத்தின் வழியாக சென்று வருகின்றன. இதனால் இம்மேம்பாலத்தில் எந்நேரமும் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும். இப்படியிருக்க இந்த மேம்பாலத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அவ்வப்போது பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை.
மணல் அரிப்பால் சேதம்
இதன் விளைவு அந்த மேம்பாலம் அதன் உறுதித்தன்மையை படிப்படியாக இழந்து வருகிறது. இதனிடையே விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின்போது பெய்த தொடர் மழையின் காரணமாகவும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை நிரம்பியதால் அணையில் இருந்து உபரிநீர், தென்பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்டதன் காரணமாகவும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக விழுப்புரம் பகுதியில் எல்லீஸ்சத்திரம், தளவானூர், பிடாகம் உள்ளிட்ட பகுதிகளில் தென்பெண்ணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதில் பிடாகம் தென்பெண்ணையாற்றில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரால் அங்குள்ள மேம்பாலத்தின் அடிப்பகுதியில் கான்கிரீட் தூண் அருகே மணல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த தூணின் அடிப்பகுதியில் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்துள்ளது. இதனை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்காமல் மணல் அரிப்பு ஏற்பட்ட கான்கிரீட் தூணின் அடிப்பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனரே தவிர நிரந்தரமாக சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உடையும் அபாயம்
அடுத்த மழைக்காலத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் இந்த மணல் மூட்டைகள் தண்ணீரில் அடித்து செல்லும் வாய்ப்புள்ளது. அவ்வாறு நடந்தால், பாலத்தின் தூண்கள் பகுதியில் மேலும் அரிப்பு ஏற்பட்டு பாலம் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு இடிந்து விழும்பட்சத்தில் பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதோடு மட்டுமின்றி சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபடும். அதுபோல் இந்த பாலத்தின் அருகில் உள்ள மற்றொரு மேம்பாலமும் சேதமடைந்துள்ளதால் தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில் போக்குவரத்து சேவையும் துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
சீரமைக்கப்படுமா?
எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை கட்டுமானத்துறை அதிகாரிகள் பாலத்தின் அடிப்பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கு மணல் அரிப்பு ஏற்பட்ட இடத்தில் இருபுறமும் மேலும் சில அடிக்கு பள்ளம் தோண்டி கான்கிரீட் கம்பிகள் மூலம் மேம்பாலத்தை சீரமைத்து அதன் உறுதி தன்மையைஉறுதிப்படுத்த வேண்டும். இனி வரக்கூடிய மழைக்காலத்திற்குள் இப்பணியை விரைந்து மேற்கொண்டு முடிக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.