கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சினை


கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சினை
x

சிவகாசி அருகே கோவில் திருவிழா கொண்டாடுவது தொடர்பாக இரு பிரிவினர் இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில் தாசில்தார் லோகநாதன் நேரில் சென்று விசாரணை நடத்தி சமரசம் செய்து வைத்தார்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அருகே கோவில் திருவிழா கொண்டாடுவது தொடர்பாக இரு பிரிவினர் இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில் தாசில்தார் லோகநாதன் நேரில் சென்று விசாரணை நடத்தி சமரசம் செய்து வைத்தார்.

கோவில் திருவிழா

சிவகாசி அருகே உள்ள கிச்சநாயக்கன்பட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அப்பகுதியை சேர்ந்த இரு சமுதாயத்தினர் கடந்த 20 வருடங்களாக உரிமை கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக அவ்வப்போது பிரச்சினை ஏற்படுவது உண்டு.

இதை வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேசி சமரசம் செய்து வந்தனர். கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டது. அப்போதைய சப்-கலெக்டர் தினேஷ் குமார் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினார். கோவில் பொதுவானது அனைவரும் சாமி தரிசனம் செய்யலாம் என்றும் கூறப்பட்டது.

போராட்டம்

இதை எதிர்த்து ஒரு தரப்பினர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஒரு தரப்பினர் கோவிலில் திருவிழா நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீசார் அந்த கிராமத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஒரு தரப்பினர் திருவிழா நடத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கோவில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாசில்தார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி தாசில்தார் லோகநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சபரிநாதன், வருவாய் ஆய்வாளர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் கிச்சநாயக்கன்பட்டி கிராமத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரும் அழைத்து சமாதானம் செய்தனர்.

ஆடம்பரம் இன்றி திருவிழா நடத்த அதிகாரிகள் வலியுறுத்தினர். சுமார் 4 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்பு இருதரப்பினரும் அதிகாரிகளின் உத்தரவுகளை ஏற்று போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story