காரியமேடை கட்டுவதில் இருதரப்பினர் இடையே பிரச்சினை


காரியமேடை கட்டுவதில் இருதரப்பினர் இடையே பிரச்சினை
x

குடியாத்தம் அருகே காரியமேடை கட்டுவதில் இரு தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வேலூர்

காரியமேடை

குடியாத்தம் ஒன்றியம் கொண்டசமுத்திரம் ஊராட்சி ராஜாகோயில் கிராமத்தில் குட்டை பகுதியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் காரியமேடை கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இங்கு காரியமேடை கட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதே நேரத்தில் அந்தப்பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் அதே இடத்தில் காரியமேடை கட்ட வேண்டும், இங்கு காரியமேடை கட்டப்பட்டால் பலருக்கும் சவுகரியமாக இருக்கும் என வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து காரியமேடை கட்டும் பணி தடைப்பட்டது.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

பிரச்சினை குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் ஒன்றியக் குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், ஆர்.திருமலை, ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி பிரேம்குமார் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஒரு தரப்பினர் அதே இடத்தில் காரியமேடை கட்ட வேண்டும் எனவும், மற்றொரு தரப்பினர் காரியமேடை கட்டக்கூடாது எனவும் வலியுறுத்தினர். இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறுகையில் இந்த பிரச்சினை குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டு காரியமேடை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.


Next Story