நிஜாம் காலனி சாலையில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம்


நிஜாம் காலனி சாலையில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம்
x

நிஜாம் காலனி சாலையில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை

கொட்டி கிடக்கும் ஊசிகள்

புதுக்கோட்டை நிஜாம் காலனி பிரதான சாலையில் நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் வீடுகளில் இருந்து கொண்டுவரும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் அடிக்கடி ஊசிகள் மற்றும் டெஸ்ட் டியூபுக்கள் உள்ளிட்ட மருத்துவ வழிகள் சாலையில் கொட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து நகராட்சியில் புகார் செய்ததும் அப்போதைக்கு நகராட்சி அதிகாரிகள் வந்து அதை அப்புறப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலையில் அதே போல் ஊசிகள், ரத்தபரிசோதனை செய்யும் டெஸ்ட் டியூப் போன்றவை பிளாஸ்டிக் பையில் போட்டு சாலையில் அடையாளம் தெரியாதவர்கள் வீசிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் தெருநாய்கள் ரத்தவாடையை கொண்டு பையை இழுத்து சென்றதால் சாலை முழுவதும் ஊசிகள் சிதறிகிடக்கிறது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

வழக்கமாக சுத்தம் செய்யும் துப்புரவு பணியாளர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் யாரும் வரவில்லை. இதனால் சாலையில் நெடுந்தூரம் ஊசி மற்றும் டெஸ்ட் டியூப்கள் உடைந்து சாலை முழுவதும் பரவிக்கிடந்தது. இந்த வழியே செல்பவர்கள் ரத்த வாடைக்கு மூக்கை பொத்திக் கொண்டு செல்லும் நிலை உள்ளது. இந்த பகுதியில் எங்கிருந்து இங்கு வந்து ஊசிகளை கொட்டுகின்றனர் என்று யாருக்கும் தெரியவில்லை. அங்கு வந்த மாடுகள் மற்றும் நாய்கள் அதனை கிளறியபடி இருந்தது. இதுபோல் ஊசிகளை கொட்டிவிட்டு செல்வதால் அங்கு மேய வரும் மாடுகள் வாயில் ஊசிகள் குத்தி ரத்தம் வரும் நிலையில் காணப்படுகிறது. இதுபோன்று பல முறை நடப்பதால் இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊசிகள் அகற்றம்

இதுகுறித்து நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நகர்மன்ற துணை தலைவர் லியாகத்அலி நகராட்சி ஊழியர்களுடன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நகராட்சி ஊழியர்களை கொண்டு ஊசிகளை அடைத்து கொட்டப்பட்ட பைகளை சோதனை செய்ததில் அதில் இருந்த சில செல்போன் எண் மற்றும் பெயர்களை கொண்டு விசாரனை நடத்தி வருகிறார். பின் அங்கிருந்த ஊசிகளை பாதுகாப்பான முறையில் லாரிகள் வரவழைத்து அப்புறப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

நோய் பரவும் அபாயம்

நிஜாம் காலனியை சேர்ந்த ராஜேந்திரன்:- புதுக்கோட்டை நிஜாம் காலனி அரசு அலுவலர்கள், வணிகர்கள், ஆசிரியர்கள் போன்றவர்கள் அதிகம் குடியிருக்கும் பகுதியாகும். இங்கு குப்பைகளை கொட்டுவதற்கு தனி இடம் அல்லது முறையான தொட்டிகள் இல்லை. இந்நிலையில் இதுபோன்ற மருத்துவ கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. உண்மையில் இது மருத்துவ பரிசோதனைக்கு உபயோகபடுத்தப்பட்ட பின்னர் கொண்டு வந்து கொட்டப்படும் ஊசிகள் தானா அல்லது போதை பழக்கம் கொண்டவர்கள் யாருக்கும் தெரியாமல் இங்கு வந்து கொட்டி செல்கின்றனரா என்று தெரியவில்லை. அடிக்கடி இதுபோல் நடப்பதை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சி.சி.டி.வி.கேமரா

நிஜாம் காலனியை சேர்ந்த சார்லஸ்:- இந்த பகுதியில் இதுபோல் அடிக்கடி நடந்து வருகிறது. இது போன்ற மருத்துவ கழிவுகளை கொட்டுவது யார் என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கொரோனா நோய் பரவல் அதிகமாக உள்ள நிலையில் இதுபோன்று ஊசிகளை பொது இடத்தில் கொட்டி செல்வதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது. மேலும் இதுபோன்ற முறையற்ற செயல்களை தடுப்பதற்கு குறிப்பிட்ட அந்த இடத்தில் சி.சி.டி.வி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வழக்கு

புதுக்கோட்டையை சேர்ந்த லட்சுமி:- மருத்துவமனைகள் மற்றும் ரத்த பரிசோதனை மையமாக இருந்தாலும் சரி மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தப்படுகிறதா என்பதை நகராட்சி மற்றும் சுகாதார துறையின் மூலம் கண்காணிக்கப்பட வேண்டும். கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் இதுபோன்று சாலையில் கொட்டி செல்பவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story