குமரி டாஸ்மாக் கடைகளில் பீர்களுக்கு கடும் தட்டுப்பாடு
குமரி மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வருவதால் டாஸ்மாக் மதுக்கடைகளில் ஜில் பீர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வருவதால் டாஸ்மாக் மதுக்கடைகளில் ஜில் பீர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
சுட்டெரிக்கும் வெயில்
தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இப்போதே அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதே போல கோடை மழை தவறாமல் பெய்து வரும் குமரி மாவட்டத்திலும் வெப்பம் அதிகமாக இருக்கிறது.
இதனால் வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள குளிர்பானங்களை பொதுமக்கள் பருகி வருகிறார்கள். அதே சமயம் மதுபிரியர்கள் பீர் குடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
பீர் தட்டுப்பாடு
அதிலும் குளிர்ச்சியூட்டப்படும் ஜில் பீர்களுக்கு தேவை அதிகரித்து உள்ளது. வெயிலின் உஷ்ணத்தை குறைக்கும் வகையில் மதியம் மற்றும் மாலை நேரங்களில் ஜில் பீர்களை அதிகம் விரும்பி குடிப்பதால் மதுக்கடைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது. பெரும்பாலானவர்கள் பீர்களை கேட்பதால் குமரி மாவட்ட டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதிலும் ஜில் பீர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு இருக்கிறது.
நாகர்கோவில் மாநகரில் பெரும்பாலான கடைகளில் குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு பீர் கிடைப்பது இல்லை. அதுவே புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் பீர் கிடைக்கிறது. ஆனால் அங்கு ஜில் பீர்கள் கிடைப்பது இல்லை. இதனால் மதுபிரியர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் பீர் தேவை தற்போது 5 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. ஆனால் வரும் காலங்களில் அதை விட தேவை அதிகரிக்கும். எனவே கூடுதல் பீர் வகைகளை தயார் செய்ய வேண்டும் என மதுபிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உற்பத்தியை அதிகரிக்க...
இதுபற்றி டாஸ்மாக் அதிகாரிகளிடம் கேட்டபோது, "குமரி மாவட்டத்தில் 110 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இங்கு நாள் ஒன்றுக்கு 1,400 பெட்டி பீர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதுவே விடுமுறை நாட்கள் எனில் 2 ஆயிரம் பெட்டி பீர்கள் விற்பனை ஆகும். வெயில் அதிகரித்து இருப்பதால் கடந்த சில நாட்களாகவே பீர் உடனடியாக விற்று தீர்ந்து விடுகிறது. இதனால் பீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. எனவே கூடுதல் பீர் வகைகளை அனுப்பி வைக்கும்படி கோரிக்கை வைத்துள்ளோம். வரும் நாட்களில் விஸ்கி, பிராந்தி, ரம் உள்ளிட்ட மதுபான வகைகளின் உற்பத்தி சற்று குறைக்கப்பட்டு பீர் உற்பத்தி அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றனர்.