ரெயிலை தடுத்து நிறுத்திய வடமாநில வாலிபரால் பரபரப்பு
ரெயிலை தடுத்து நிறுத்திய வடமாநில வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் சென்னை நோக்கி சென்ற வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலை வடமாநில வாலிபர் தடுத்து நிறுத்தினார். இதனால் ரெயில் 10 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
கர்நாடகா மாநிலம் மங்களூர் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு வந்தது. அதன் பிறகு சிறிது நேரம் நின்று காட்பாடி நோக்கி புறப்பட்டது. வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் ரெயில் 20 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுகொண்டு இருந்தது.
அப்போது திடீரென சுமார் 30 வயது மதிக்க்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலை தண்டவாளத்தின் நடுவில் நின்று மறித்தார். இதைபார்த்த ரெயில் டிரைவர் பலத்த சத்தத்துடன் ஹாரன் அடித்தும் அந்த வாலிபர் தண்டவாளத்தை விட்டு செல்ல வில்லை. ரெயில் என்ஜின் டிரைவர் தொடர்ந்து ஹாரன் அடித்ததால் அங்கு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபரை அப்புறப்படுத்தினர்.
இதனால் சுமார் 10 நிமிடம் ரெயில் தாமதமாக புறப்பட்டது. அதன் பிறகு அந்த வாலிபரை வாணியம்பாடி ரெயில் நிலைய அதிகாரியிடம் ஒப்படைத்து ஜோலார்பேட்டை ரெயில்வே பாதுகாப்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அந்த வாலிபரிடம் விசாரணை செய்ததில் அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டதும், வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து அவரை போலீசார் வாணியம்பாடி பகுதியில் உள்ள கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர். வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலை தடுத்து நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.