ஊருக்குள் புகுந்த காட்டெருமைகளால் பரபரப்பு


ஊருக்குள் புகுந்த காட்டெருமைகளால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 Feb 2023 12:15 AM IST (Updated: 9 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் ஊருக்குள் புகுந்த காட்டெருமைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

கூடலூர்

கூடலூரில் ஊருக்குள் புகுந்த காட்டெருமைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

காட்டெருமைகள்

கூடலூர், முதுமலை, மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளில் வறட்சியான காலநிலை தொடங்கியுள்ளது. இதனால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக வனவிலங்குகள் ஊருக்குள் வரும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

கூடலூர் நகருக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவில் 2 காட்டெருமைகள் புகுந்தது. அவை சின்னப்பள்ளி வாசல் தெருவுக்கு திரும்பும் இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து நின்றது. இதனால் வெளியூர்களில் இருந்து கூடலூருக்கு வந்த இரவு நேர வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வனவர் செல்லதுரை தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து காட்டெருமைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். பல கட்டமாக முயற்சி செய்து விடியற்காலையில் காட்டெருமைகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

கவனமுடன்...

இதற்கிடையே நேற்று காலை 11 மணிக்கு கூடலூர் மார்தோமா நகர் பகுதியில் உள்ள காபி காட்டுக்குள் காட்டெருமைகள் நிற்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனால் மீண்டும் வனத்துறையினர் விரைந்து சென்று, அவற்றை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அவை தேன் வயல் பகுதியில் காட்டெருமைகள் சென்றது. தொடர்ந்து ஊருக்குள் வராமல் தடுக்க கண்காணிப்பு பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, கோடை காலம் தொடங்கி விட்டதால் காட்டு யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வன விலங்குகள் ஊருக்குள் வருகிறது. இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் வீடுகளை விட்டு வெளியே வரும் பொதுமக்கள் மிகுந்த கவனமுடன் செல்ல வேண்டும் என்றனர்.



Next Story