பொய்கை வாரச்சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவு


பொய்கை வாரச்சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவு
x

பொய்கை வாரச்சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவால் வியாபாரிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

வேலூர்

வேலூரை அடுத்து பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு சென்னை, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கறவை மாடுகள் உள்ளிட்ட மாடுகளை வாங்கிச் செல்கின்றனர். இதனால் வெளி மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்காக ஏராளமான மாடுகள் கொண்டுவரப்படுகின்றன.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பொய்கை வாரச்சந்தைக்கு மாடுகளின் வரத்து குறைவால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். வாரத்திற்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் வியாபாரத்திற்காக கொண்டு வரப்படும். இந்த நிலையில் நேற்று 500-க்கும் குறைவான மாடுகளே விற்பனைக்காக வந்தன. இதனால் வெளி ஊரில் இருந்து வந்த வியாபாரிகள் மாடுகளை வாங்காமலே சென்றனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், 'வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கடுமையான வெயில் வாட்டி வதைக்கின்றது. ஆகவே வெளி மாநிலத்தில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாடுகள் வரத்து குறைவாக காணப்படுகிறது. கடந்த வாரமே ஆயிரத்துக்கு குறைவான மாடுகள் விற்பனைக்காக வந்தன. இந்த வாரம் 500-க்கும் குறைவான மாடுகளே விற்பனைக்கு வந்ததால் வெளியூர் வியாபாரிகள் மாடுகளை வாங்காமல் ஏமாற்றத்துடன் சென்றனர். வாரத்திற்கு சுமார் ரூ.2 கோடிக்கு மேல் வர்த்தகம் ஈட்டி தரும் பொய்கை வாரச்சந்தையில் இந்த வாரம் ரூ.60 லட்சம் அளவிற்கு மட்டுமே வியாபாரம் நடந்துள்ளது என்றனர்.


Next Story