எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க தடை இல்லை -ஐகோர்ட்டு உத்தரவு
எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க தடை விதிக்க முடியாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சென்னை,
தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறையில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள டெண்டர் ஒதுக்கீடு வழங்கியதில் ரூ.4,800 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாகக் கூறி கடந்த 2018-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிராக தி.மு.க. குற்றம் சாட்டியது.
இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். அதில் கூறியிருப்பதாவது:-
ஒட்டன்சத்திரம்-தாராபுரம்-அவினாசிபாளையம் 4 வழிச்சாலைக்கான திட்ட மதிப்பீடு ரூ.713.34 கோடியாக இருந்த நிலையில், அந்த திட்டத்துக்கான நிதி ரூ.1,515 கோடியாக உயர்த்தப்பட்டு அதற்கான ஒப்பந்தம் எடப்பாடி பழனிசாமியின் உறவினரான ராமலிங்கம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த பணிகள்
இதேபோல மதிப்பை அதிகரித்து, நெல்லை- செங்கோட்டை-கொல்லம் 4 வழிச்சாலையை விரிவுபடுத்தி, பலப்படுத்த ரூ.720 கோடிக்கான ஒப்பந்தம் வெங்கடாஜலபதி அன்ட் கோ என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதே நிறுவனத்துக்கு ரூ.200 கோடி மதிப்புள்ள மதுரை ரிங் ரோடு ஒப்பந்தமும் வழங்கப்பட்டுள்ளது.
வண்டலூர் முதல் வாலாஜா வரையுள்ள 4 வழிச்சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற ரூ.200 கோடிக்கான ஒப்பந்தம் மதுரையைச் சேர்ந்த எஸ்.பி.கே. அன்ட் கோ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் கோட்டங்களின் கீழ் வரும் சாலைகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள் தொடர்பான ஒப்பந்தமும் வெங்கடாஜலபதி அன்ட் கோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சி.பி.ஐ. விசாரணை
இந்த ஒப்பந்த பணிகள் எல்லாம் விதிமுறைகளை மீறி தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து எடப்பாடி பழனிசாமி வழங்கி உள்ளார். இதனால், சுமார் 4,800 கோடி வரை ஊழல் நடந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த டெண்டர் முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு. சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்ட ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்தது. இந்த வழக்கை ஐகோர்ட்டு மீண்டும் விசாரித்து, எந்த அமைப்பு விசாரிக்க வேண்டும் என்று மீண்டும் முடிவு செய்ய வழக்கை திருப்பி அனுப்பி உத்தரவிட்டது.
திரும்ப பெற அனுமதி
அதன்படி இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை இதுதொடர்பாக ஏற்கனவே ஆரம்பகட்ட விசாரணை நடத்தியுள்ளதால் அவர்களே இந்த விசாரணையை தொடரட்டும் எனக்கூறி, இந்த வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ கோரிக்கை விடுத்தார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.
ஆணையர் முடிவு
அப்போது மாநில அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, 'இந்த குற்றச்சாட்டு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்தி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணையை தொடருவது குறித்து ஆணையர் முடிவு எடுப்பார்' என்று கூறினார்.
தடை விதிக்க மறுப்பு
இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் எந்த முடிவும் எடுக்கக்கூடாது. தற்போதைய நிலையே தொடர உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, அதுபோல தடை விதிக்க முடியாது என்றார்.
பின்னர். விசாரணையை வருகிற 26-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.