தமிழகத்தில் புதிய அணைகள் கட்ட வாய்ப்பில்லை அமைச்சர் துரைமுருகன் பேச்சு


தமிழகத்தில் புதிய அணைகள் கட்ட வாய்ப்பில்லை அமைச்சர் துரைமுருகன் பேச்சு
x

தமிழகத்தில் புதிய அணைகள் கட்ட வாய்ப்பில்லை என்று அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

வேலூர்

தமிழகத்தில் புதிய அணைகள் கட்ட வாய்ப்பில்லை என்று அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

சைக்கிள் வழங்கும் விழா

அணைக்கட்டு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் க.முனுசாமி வரவேற்று பேசினார். கதிர்ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி. நந்தகுமார், கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மு.பாபு, ஒன்றியக் குழு தலைவர் பாஸ்கரன், துணைத் தலைவர் சித்ரா குமார பாண்டியன், மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அமைப்பாளராக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு 10 அரசு பள்ளிகளை சேர்ந்த 1,968 மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:-

தொழிற்பேட்டை

மாணவ- மாணவிகள் கல்வி பயிலும்போது இடையில் நிற்பதை தடுக்க பல்வேறு உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. கடந்த ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் பயனுள்ளதாக இருப்பதால் தொடர்ந்து நடத்தி வருகிறோம். அரசு வழங்கும் பல்வேறு சலுகைகளை மாணவர்கள் பயன்படுத்தி உயர்கல்வி படிக்க வேண்டும். அணைக்கட்டு தொகுதியில் வேளாண்மை செழிக்கும் வகையில், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஒரு ஆண்டுக்குள் மேல் அரசம்பட்டு பகுதியில் அணைக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இந்த தொகுதி பின்தங்கிய தொகுதியாக இருப்பதால் தொழிற்பேட்டை ஒன்றும் விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதி மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி வேலை செய்ய வேண்டும் என்பதற்கு நந்தகுமார் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

அணைகள் கட்ட வாய்ப்பில்லை

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில் ஆந்திர அரசு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணை கட்டாமல் தடுக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும். தமிழகத்தில் புதிய அணைகள் கட்ட வாய்ப்பில்லை. அதற்கான இட வசதியோ, நீர்வரத்தோ இல்லை என்றார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை அணைக்கட்டு அரசினர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் உதவி தலைமை ஆசிரியர் நாகலிங்கம் மற்றும் அரசினர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கலாவானி ஆகியோர் செய்து இருந்தனர்.


Next Story