'புதுச்சேரி முதல்-அமைச்சருடன் மோதல் எதுவும் இல்லை' தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


புதுச்சேரி முதல்-அமைச்சருடன் மோதல் எதுவும் இல்லை தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் மோதல் எதுவும் இல்லை என்றும், எங்களுக்குள் இருப்பது அண்ணன்-தங்கை பிரச்சினை தான் என்றும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

நெல்லை,

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று நெல்லைக்கு சென்றார். அவர் நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் ஆனித்திருவிழாவையொட்டி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் சார்பில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

பின்னர் சுவாமி வீதி உலா சென்று விட்டு வந்த பின்னர் கோவில் முன்பு உள்ள அனுப்புகை மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

மோதல் இல்லை

பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரி முதல்-அமைச்சருக்கும், கவர்னரான எனக்கும் இடையே மோதல் எதுவும் இல்லை. எங்கள் இருவருக்குமான பிரச்சினை அண்ணன்-தங்கை பிரச்சினை தான். அவர் என்னை பற்றி ஏதும் தவறாக பேசியிருக்கமாட்டார்.

முதல்-அமைச்சரும், கவர்னரும் சேர்ந்து செயல்பட்டதால் தான் புதுச்சேரிக்கு கடந்த ஆண்டுகளை விட தற்போது ரூ.2 ஆயிரம் கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 13 ஆண்டுகளுக்கு பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி முதல்-அமைச்சர், நர்சுகளை பணி நிரந்தரம் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் அவ்வாறு பேசி இருக்கலாம். நீதிமன்றத்தில் தடை ஆணைகளும், வழிகாட்டுதல்களும் உள்ள காரணத்தினால் நர்சுகளை பணி நிரந்தரம் செய்ய முடியாதநிலை உள்ளது. புதுச்சேரியில் 65 ஆயிரம் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டம் தமிழகத்தில் வெறும் அறிவிப்பாகவே உள்ளது" என்றார்.


Next Story