தூத்துக்குடியைபோதை பொருள் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும்: போலீஸ் சூப்பிரண்டு


தூத்துக்குடியைபோதை பொருள் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும்: போலீஸ் சூப்பிரண்டு
x
தினத்தந்தி 5 April 2023 12:15 AM IST (Updated: 5 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியை போதை பொருள் இல்லாத மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியை போதை பொருள் இல்லாத மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தினார்.

கலந்துரையாடல் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புதிதாக பணியில் சேர்ந்து உள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார். தலைமையிட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பேசும் போது, பொதுமக்களுக்கு சேவையாற்றுவதற்காகத்தான் நாம் போலீஸ் துறை அலுவலராக நியமிக்கப்பட்டு பலதரப்பட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம்.

போதை பொருள்

சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, பொதுமக்கள் பாதிப்படையாமல் பாதுகாப்பது நமது முக்கிய கடமையாகும். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உரிய முறையில் காலதாமதம் இல்லாமல் உரிய விசாரணை மேற்கொண்டு பாரபட்சமில்லாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் போன்றவற்றை முற்றிலும் தடுத்து போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது இடங்களில் அமர்ந்து மது அருந்திக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பவர்கள் மீதும், போக்குவரத்து விதிகளை மீறி அதிக வேகமாக செல்பவர்கள், வாகனங்களில் சாகசம் செய்பவர்கள், ரேஸ் வைப்பவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை வேண்டும். நாம் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு, மக்களுக்கு நல்லது செய்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்று கூறினார்.

சப்-இன்ஸ்பெக்டருக்கு பரிசு

கூட்டத்தில் போலீசாரின் செயல்பாடுகள் மற்றும் ஈடுபாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு கேட்ட கேள்விகளுக்கு சிறந்த முறையில் பதில் அளித்த முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தருக்கு போலீஸ் சூப்பிரண்டு பரிசு வழங்கி பாராட்டினார். கூட்டத்தில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story