தோட்டக்கலைத்துறை சலுகைகள் குறித்து உரிய அறிவிப்புகள் இல்லை


தோட்டக்கலைத்துறை சலுகைகள் குறித்து உரிய அறிவிப்புகள் இல்லை
x
தினத்தந்தி 18 July 2023 12:15 AM IST (Updated: 18 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி பகுதியில் தோட்டக்கலைத்துறை மூலம் அளிக்கப்படும் சலுகைகள் குறித்து உரிய அறிவிப்புகள் இல்லை என விவசாயிகள் குற்றச்சாட்டி உள்ளனர்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

சீர்காழி பகுதியில் தோட்டக்கலைத்துறை மூலம் அளிக்கப்படும் சலுகைகள் குறித்து உரிய அறிவிப்புகள் இல்லை என விவசாயிகள் குற்றச்சாட்டி உள்ளனர்.

தனி பட்ஜெட்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் விவசாயிகளின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் வகையில், வேளாண்மை துறைக்கு என தனி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அதன்படி வேளாண்மை துறை நலத்திட்டங்கள் குறித்தும், அதற்காக ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீடு பற்றி ஆண்டுதோறும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வேளாண்மை துறை பட்ஜெட்டில் விரிவாக விளக்கப்படுகிறது.

இதனால் விவசாயிகள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பெற்று வருகின்றனர். வேளாண்மை துறையின் பல்வேறு சலுகைகளால் ஈர்க்கப்பட்டு சமீபத்தில் இளைஞர்கள் அதிக அளவில் விவசாயத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

தெரியப்படுத்துவதில்லை

வாழை, காய்கறி பயிர்கள், சிறுதானிய பொருட்கள் உற்பத்தி உள்ளிட்டவைகளை மேம்படுத்திட வேளாண்மை துறையில் தோட்டக்கலைத்துறை என தனி பிரிவு உள்ளது.

தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கிராமங்கள் தோறும் சென்று தங்களுடைய துறை சார்பில் வழங்கப்படக்கூடிய சலுகைகள் குறித்தும், தோட்டக்கலை பயிர்கள் உற்பத்தி குறித்தும் ஆலோசனைகள் வழங்க வேண்டும். ஆனால் சீர்காழி வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் முற்றிலும் விவசாயிகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரியப்படுத்துவதில்லை.

சலுகைகள் பெற்றுத்தர நடவடிக்கை

இதுகுறித்து தோட்டக்கலை பயிரிடும் விவசாயிகள் கூறுகையில், நெல் உற்பத்திக்கு நிகராக காய்கறிகள், பழ வகைகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு உலக அளவில் சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கும் ஆண்டாக அறிவிக்கப்பட்டு, சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு, சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை, சீர்காழி வட்டாரத்திற்கு உட்பட்ட 37 ஊராட்சிகளில் ஏராளமான விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு மூலம் வழங்கக்கூடிய விதைகள், உரங்கள், மானிய விலையில் மின்மோட்டார் வழங்குதல் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை விவசாயிகளுக்கு தெரியப்படுத்துவதில்லை. ஆனால் தோட்டக்கலை பயிர்களை பயிரிடாத நபர்களுக்கு மேற்கண்ட திட்டங்கள் வழங்கப்பட்டு வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் விசாரணை மேற்கொண்டு, விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கக்கூடிய சலுகைகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story