அரசு ஆஸ்பத்திரிகளில் நாய், பாம்புக்கடி மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்


அரசு ஆஸ்பத்திரிகளில் நாய், பாம்புக்கடி மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்
x

ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் நாய்க்கடி மருந்து தட்டுப்பாடின்றி கிடைப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை,

சுதந்திர தினத்தையொட்டி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள காரணீஸ்வரர் கோவிலில் பொதுவிருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தைக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், பக்கத்தில் இருக்கின்ற கேரளாவில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அதற்கு எடப்பாடி பழனிசாமி, அந்த குழந்தைக்கு இங்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை, தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்திருக்கிறார்கள் என புகாராக சொல்லி இருக்கிறார்.

அண்டை மாநிலங்களில் இருந்து...

கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தமிழ்நாட்டுக்கு சிகிச்சைக்காக வந்து கொண்டிருக்கிறார்கள். சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தினந்தோறும் 18 ஆயிரம் பேர் வரை புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகிறார்கள். இதில் 15 சதவீதத்துக்கும் மேலானவர்கள் அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

இப்படி அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து சிகிச்சைபெறும் சூழ்நிலையில், அந்த குழந்தை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை பெற்று நலம் அடையாமல், கேரளாவுக்கு சென்று சிகிச்சை பெற்றிருக்கிறது, மருத்துவத்துறையின் மோசமான நிலை என எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருக்கிறார்.

நாய், பாம்புக்கடி மருந்துகள்

மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் தமிழ்நாட்டில் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட எவ்வளவு இடங்களில் ஆய்வு செய்திருக்கிறோம் என்ற பட்டியலை தருகிறோம். உங்கள் ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சரின் பயண பட்டியலுடன், கடந்த 2 ஆண்டுகளாக நான் சென்ற பயணப்பட்டியலை ஒப்பிட்டால், நான் சென்ற இடங்களில் பாதி அளவுகூட சென்றிருக்கமாட்டீர்கள். இதை நான் ஒரு சவாலாகவே எடப்பாடி பழனிசாமிக்கு விடுக்கிறேன்.

தமிழ்நாட்டில் எங்கும் மருந்து தட்டுப்பாடு இல்லை. 2 ஆயிரத்து 286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் நாய்க்கடி மருந்து (ஏ.ஆர்.வி.), பாம்புக்கடி மருந்து (ஏ.எஸ்.வி.) ஆகியவை இருப்பில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story