குறுவை சாகுபடிக்கு தட்டுப்பாடின்றி இடு பொருட்கள்


குறுவை சாகுபடிக்கு தட்டுப்பாடின்றி இடு பொருட்கள்
x
தினத்தந்தி 20 Jun 2023 12:15 AM IST (Updated: 20 Jun 2023 3:57 PM IST)
t-max-icont-min-icon

திருமருகல் பகுதியில் குறுவை சாகுபடிக்கு தேவையான வேளாண் இடுபொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் பகுதியில் குறுவை சாகுபடிக்கு தேவையான வேளாண் இடுபொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறுவை சாகுபடி

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக ஜூன் மாதம் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கும். இதற்காக ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அதை தொடர்ந்து ஜூன் 16-ந் தேதி கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆற்று நீரை பயன்படுத்தியும், ஆழ்குழாய் தண்ணீரை பயன்படுத்தியும் குறுவை சாகுபடி நடைபெறுவது வழக்கம். ஆழ்குழாய் வசதி கொண்ட விவசாயிகள் ஆற்று நீர் வருவதற்கு முன்பாகவே முன்பட்ட குறுவை சாகுபடி பணிகளை தொடங்கி விடுவார்கள். வழக்கம்போல் இந்த ஆண்டும் ஏராளமான விவசாயிகள் முன்பட்ட குறுவை சாகுபடியை தொடங்கி மேற்கொண்டு வருகிறார்கள்.

போதிய நீர் இருப்பு

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் திருமருகல், அம்பல், பொறக்குடி, கணபதிபுரம், சேஷமூலை, ஆலத்தூர், போலகம், பண்டாரவடை, திருப்புகலூர், மேலப்பூதனூர் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் முன்பட்ட குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கி செய்து வருகின்றனர்.

ஆழ்குழாய் பாசனத்தை வைத்து சாகுபடி பணிகளை தொடங்கினாலும், மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் அந்த நீரை கொண்டும் சாகுபடி பணிகளை சிரமமின்றி மேற்கொள்ள முடியும் என விவசாயிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

தட்டுப்பாடின்றி...

குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து முறை வைக்காமல் தண்ணீர் வழங்க வேண்டும். மேலும் சாகுபடிக்கு தேவையான உரம், பூச்சிமருந்து, நுண்ணுயிர் மருந்துகள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க போதிய அளவு இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story