மயானத்திற்கு செல்ல பாதை இல்லை - மூதாட்டி உடலுடன் சாலை மறியல் - போராட்டத்தில் ஈடுபட்ட 37 பேர் கைது
பேரையூர் அருகே மயான பாதை கேட்டு இறந்த மூதாட்டி உடலை வைத்து சாலை மறியல் செய்த 37 பேரை போலீசார் கைது செய்தனர்.
பேரையூர்,
பேரையூர் அருகே மயான பாதை கேட்டு இறந்த மூதாட்டி உடலை வைத்து சாலை மறியல் செய்த 37 பேரை போலீசார் கைது செய்தனர்.
மூதாட்டி இறப்பு
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ளது சிலைமலைப்பட்டி. இந்த ஊரை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி காளியம்மாள் (வயது 65). இவர் அங்குள்ள ஆதிதிராவிடர் காலனியில் குடியிருந்து வந்தார். காளியம்மாள் நேற்று முன்தினம் உடல்நலம் சரியில்லாமல் இறந்து விட்டார். காளியம்மாள் உடலை மயானத்துக்கு கொண்டு செல்வதற்காக பாதை கேட்டு ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர்களும், ஆதித்தமிழர் கட்சியை சேர்ந்தவர்களும் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மயானத்துக்கு செல்லும் பாதையில் தற்போது விவசாய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
இதனால் காளியம்மாளின் உடலை கொண்டு செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால் மயானத்துக்கு செல்ல நிரந்தர பாதை அமைத்து தர வேண்டும் என்றனர். தகவல் அறிந்த பேரையூர் தாசில்தார் ரவிச்சந்திரன், பேரையூர் துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா, டி.கல்லுப்பட்டி இன்ஸ்பெக்டர் பத்மநாபன் மற்றும் போலீசார், போராட்டம் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை
தற்போது காளியம்மாளின் உடலை மயானத்துக்கு கொண்டு செல்லுங்கள், மயான பாதை செல்லும் இடம் பட்டா நிலத்தில் உள்ளது. பின்னர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள். அதற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பாதை வேண்டும் என்று பல நாட்களுக்கு முன்பு வருவாய்த்துறையினரிடம் கோரிக்கை அளித்தோம்.
இதுவரை நடவடிக்கை இல்லை. அதனால் எங்களுக்கு உடனடியாக பாதை அமைத்து தர வேண்டும் என்றனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
37 பேர் கைது
இதையடுத்து காளியம்மாள் உடலை தூக்கி வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரையூர்-சிலைமலைப்பட்டி சாலையில் வைத்து சாலை மறியல் செய்தனர். நிரந்தர மயானபாதை அமைக்க எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறினர். அவர்களிடம் வருவாய் துறையினரும், போலீசாரும் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படவில்லை. இதனால் போலீசார் சாலை மறியல் செய்தவர்களை குண்டு கட்டாக தூக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர்.
ஆதித்தமிழர் கட்சி பொதுச்செயலாளர் விஸ்வைகுமார் உள்பட 37 பேரை கைது செய்து பேரையூரில் உள்ள மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர்.
பின்னர் காளியம்மாளின் உடலை போலீசார், உறவினர்களிடம் ஒப்படைத்தனர். உறவினர்கள் காளியம்மாள் உடலை மயானத்துக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.