தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் பேசியதில் எந்த தவறும் இல்லை
தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் பேசியதில் எந்த தவறும் இல்லை என்று முத்தரசன் கூறினார்.
திருச்சி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-
தவறு கிடையாது
மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும் என்றார்கள். 8 ஆண்டுகளில் 16 கோடி பேருக்கு வேலை வழங்கி இருக்க வேண்டும். மாறாக, ஏற்கனவே பல்வேறு துறைகளில் வேலையில் இருப்பவர்கள் வெளியேறுகிற சூழல்தான் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு 16 முறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திவிட்டு 2 முறை குறைத்து இருக்கிறார்கள். பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இலங்கையில் விலைவாசி உயர்வுக்கு எதிராக அங்கு மக்கள் போராடி வருகிறார்கள். இலங்கையில் உள்ள அதே கொந்தளிப்பு இந்தியாவிலும் ஏற்படாது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை.
தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அரசு தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்கள். இன்னும் பல வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டி உள்ளது. பிரதமர் மோடி தமிழகத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது, அவர் மதச்சார்பின்மை கொள்கையில் உறுதியாக இருக்கிறார் என்பதை காட்டுகிறது. இது வரவேற்புக்குரியது. ஆனால் முதல்-அமைச்சர் பேசியதற்கு பா.ஜ.க.வினர் கண்டனம் தெரிவிக்கிறார்கள். தமிழகத்தின் கோரிக்கைகள் உள்ளிட்டவை குறித்து முதல்-அமைச்சர் பேசியதில் எந்ததவறும் கிடையாது. இதற்கு கண்டன அறிக்கை வெளியிடுவது அரசியல் நாகரீகம் கிடையாது.
திருப்பூரில் மாநில மாநாடு
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அங்கம் வகித்தது. திருச்சி மாவட்டம் கூத்தைப்பார் பேரூராட்சி துணைத்தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அங்கு தி.மு.க.வை சேர்ந்தவர் போட்டியிட்டு தேர்வாகி உள்ளார். தி.மு.க.வுடனான கூட்டணி மாநில அளவில் தொடர வேண்டும் என்பதே அனைவரது விருப்பம். ஆனால் மாவட்ட அளவில் அதற்கான ஒத்துழைப்பு இல்லாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. இந்த விவகாரம் குறித்து அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில்மகேஷ்பொய்யாமொழி ஆகியோரிடம் தெரிவித்துள்ளோம். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆகஸ்டு மாதம் 6, 7, 8-ந் தேதிகளில் திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநில மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து தீர்மானம் நிறைவேற்ற தற்போதே குழுவை நியமித்துள்ளோம். ஆகஸ்டு 9-ந் தேதி மோடி அரசே வெளியேறு என்ற முழக்கத்துடன் பிரமாண்ட பேரணி நடத்தப்படும். குறுவை சாகுபடிக்காக மே மாதம் மேட்டூர்அணையில் இருந்து தண்ணீர் திறந்து இருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் வாய்க்கால்களில் தூர்வாரும் பணியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறுஅவர் கூறினார்.
அப்போது நிர்வாகிகள் இந்திரஜித், சுரேஷ், மகேந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.