அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் தொய்வு கூடாது: அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவு
அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் எந்தவித தொய்வும் ஏற்படக்கூடாது என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவிட்டார்.
சென்னை,
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், விடுதிகள் மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் நிர்வாகம் குறித்த ஆய்வு கூட்டம் சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம தொழில்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவர் துறைமுகம் காஜா, மேலாண்மை இயக்குநர் அனில் மேஷ்ராம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை கமிஷனர் இரா.நந்தகோபால், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சிறப்பு செயலாளர் வா.சம்பத் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
அதிகாரிகள் மத்தியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:-
மக்களை சென்றடைய வேண்டும்
2022-2023-ம் ஆண்டுக்கான புதிய அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவது, துறையின் திட்ட செயல்பாடுகள், கள்ளர் சீரமைப்பு பள்ளி, விடுதிகள் மற்றும் இத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் கல்லூரி, பள்ளி விடுதிகளின் நிர்வாகம், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கும் திட்டம், விடுதி மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கும் திட்டம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள் உரிய முறையில் மக்களைச் சென்றடைய வேண்டும்.
அதேபோல், வறுமைக்கோட்டின் கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல வகுப்பை சேர்ந்தவர்களுக்கு சலவைப்பெட்டிகள் மற்றும் தையல் எந்திரங்கள் வழங்கும் திட்டங்கள், கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், வீடற்ற ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல வகுப்பை சேர்ந்தவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கும் திட்டம், நரிக்குறவர் நல வாரியம், சீர்மரபினர் நல வாரியம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு கடனுதவி திட்டங்கள் உரிய முறையில் மக்களை சென்றடைய வேண்டும்.
தொய்வு கூடாது
இதில் எவ்வித தொய்வும் ஏற்பட்டுவிடக்கூடாது. அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விடுதிகளை நல்ல முறையில் பராமரித்து, மாணவர்கள் தங்கும் வகையில் உகந்த சூழலை உருவாக்க வேண்டும். எந்தவித புகார்களுக்கும் இடமளிக்காதவண்ணம் பணிபுரிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, 2021-2022-ம் ஆண்டில் சிறந்த முறையில் பணியாற்றிய மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், கேடயம் மற்றும் காசோலையை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.