சாதி அடிப்படையில் பாகுபாடு பார்க்கக்கூடாது
அனைவருக்கும் கோவிலில் வழிபாடு செய்ய உரிமை உண்டு என்றும், சாதி, நம்பிக்கை, நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு பார்க்கக்கூடாது எனவும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
அனைவருக்கும் கோவிலில் வழிபாடு செய்ய உரிமை உண்டு என்றும், சாதி, நம்பிக்கை, நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு பார்க்கக்கூடாது எனவும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
வழிபாடு செய்ய உரிமை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகாவில் உள்ள அய்யனார் மற்றும் கருப்பர் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதிமுருகன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் விசாரித்தனர்.
முடிவில், கோவில் ஒரு வழிபாட்டுத் தலமாகும். கோவில் என்பது அனைத்து பக்தர்களுக்கும் பொதுவானது. கடவுள் நம்பிக்கை உள்ள அனைவருக்கும் கோவிலில் வழிபாடு செய்ய உரிமை உள்ளது. ஒருவரின் சாதி, நம்பிக்கை, நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு பார்க்கக்கூடாது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.
ஒத்துழைக்க வேண்டும்
இந்த வழக்கில் பட்டியலின சமூகத்தினர் மற்றும் பழங்குடியினர் உள்பட அனைத்து சமூகத்தினரையும் இணைத்து விழாவை கொண்டாடுமாறு தனி நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த விஷயத்தில் அனைத்து சமூகத்தினரும் ஒன்றாக இணைந்து அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.