திட்டங்களை நிறைவேற்றும் போது அரசியல் தலையீடு இருக்கக்கூடாது
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு திட்டங்களை நிைறவேற்றும்போது அரசியல்தலையீடு இருக்கக்கூடாது என்று அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு திட்டங்களை நிைறவேற்றும்போது அரசியல்தலையீடு இருக்கக்கூடாது என்று அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி மக்களின் முக்கியமான 10 பிரச்சினைகளைக்கு தீர்வு காண்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கினார். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:-
ராணிப்பேட்டை தொகுதி மக்களின் நீண்ட நாள் பிரச்சினைகள் குறித்து 10 கோரிக்கைகள் அளிக்கப்பட்டுள்ளது. சிப்காட் பகுதியில் உள்ள குரோமியக் கழிவுகள் அகற்றுதல், நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம், அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம், இ.எஸ்.ஐ. மருத்துவமனை மேம்பாடு மற்றும் பாலாற்றில் குடிநீர் கிணறுகள் மற்றும் குழாய்கள் மணல் அள்ளப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றை தடுக்க நடவடிக்கைகள் இது போன்ற 10 கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அதற்கு தீர்வு காண வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் தலையீடு இல்லாமல்
இவைகளை நிறைவேற்ற அரசுக்கு முறையான அறிக்கையை அலுவலர்கள் ஆய்வு செய்து வழங்க வேண்டும். இதில் குறைகள் இருந்தால் அதை உடனடியாக தெரிவிக்கலாம். அதை நிவர்த்தி செய்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்.
அதேபோன்று மாவட்டத்தில் அரசு திட்டங்களை செயல்படுத்தும் போது, யாருடைய அரசியல் தலையீடும் இல்லாமல் முறையாக நிறைவேற்ற வேண்டும். நியாயமான கோரிக்கைகளை கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும். மக்களுக்கான பிரச்சினைகளை களைய முறையான பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
தற்போதைய பருவ மழையில் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. மனித உயிர் சேதங்கள் ஏதும் இல்லாமல் மழை வெள்ள பாதிப்புகள் திறமையாக கையாளப்பட்டுள்ளது. மேலும் சேதாரங்கள் குறித்து விரிவான அறிக்கையும் தயார் செய்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று தான் மக்கள் திட்டங்களுக்கும் முன்னுரிமை வழங்கி முறையாக எவ்வித குளறுபடி இல்லாமல் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.