நாட்டின் அடிப்படை கட்டமைப்பை உயர்த்துவதில் அரசியல் இருக்க கூடாது-மத்திய மந்திரி எல்.முருகன் பேட்டி


நாட்டின் அடிப்படை கட்டமைப்பை உயர்த்துவதில் அரசியல் இருக்க கூடாது-மத்திய மந்திரி எல்.முருகன் பேட்டி
x

நாட்டின் அடிப்படை கட்டமைப்பை உயர்த்துவதில் எந்த அரசியலும், தடங்கலும் இருக்க கூடாது என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.

தூத்துக்குடி

"நாட்டின் அடிப்படை கட்டமைப்பை உயர்த்துவதில் எந்த அரசியலும், தடங்கலும் இருக்க கூடாது" என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.

விநாயகர் சதுர்த்தி

தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று தூத்துக்குடிக்கு வந்தார்.

இங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கின்ற தமிழ் மக்கள், இந்திய மக்கள் விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

மக்கள் அதிர்ச்சி

தமிழக முதல்-அமைச்சர் சில பண்டிகைக்கு வாழ்த்து சொல்கிறார். சில பண்டிகைகளுக்கு அவர் நேரடியாக போய் அவர்களுடன் கொண்டாடுகிறார். ஆனால், பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படுகிற ஒரு பண்டிகைக்கு வாழ்த்து சொல்ல அவருக்கு மனமில்லை. அது தி.மு.க.வின் கொள்கையாக இருக்கலாம். ஆனால், தற்போது அவர் முதல்-அமைச்சர். மக்களுடைய பிரதிநிதியாக இருப்பவர், ஒரு பெரும்பான்மையான மக்கள் கொண்டாடக்கூடிய விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாதது மக்களிடத்தில் மிகப் பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

8 வழிச்சாலை

8 வழிச்சாலை திட்டத்தை கண்மூடித்தனமாக எதிர்த்தது தி.மு.க. என்பது அத்தனை பேருக்குமே தெரியும். ஆனால், இன்றைக்கு 8 வழிச் சாலை திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது. நாட்டின் அடிப்படை கட்டமைப்பு உயர்த்தப்பட வேண்டும். இதில் எந்த அரசியலும், தடங்கலும் இருக்க கூடாது.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. ஜெயிலருக்கு பாதுகாப்பில்லை, போலீஸ்காரர்களுக்கு பாதுகாப்பில்லை. சென்னையில் நகை அணிந்து தனியாக போக முடியவில்லை. குற்றவாளிகளுக்கு கடுமையாக தண்டனை கொடுக்கப்படவேண்டும். குற்றங்களை கட்டுப்படுத்த வேண்டும்.

சுகாதாரமான இந்தியா

மத்திய அரசு அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் மற்றும் அனைத்து வீடுகளிலும் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறது. இந்தியா 8 வருடத்தில் ஒரு சுகாதாரமான இந்தியாவாக மாறி இருக்கிறது. அதேபோல் கொரோனாவால் மற்ற நாடுகள் இன்றும் கூட பாதிக்கப்பட்டு கொண்டு இருக்கின்றன. ஆனால், நம் பிரதமர் எடுத்த நடவடிக்கையால், மாஸ்க் இல்லாமல் தைரியமாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story