பொதுமக்களுக்கு குடிநீரை தடையின்றி வினியோகம் செய்ய வேண்டும்; அதிகாரிகளுக்கு, அமைச்சர் மனோதங்கராஜ் அறிவுறுத்தல்
குமரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு குடிநீரை தங்கு தடையின்றி வினியோகம் செய்ய வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ், அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு குடிநீரை தங்கு தடையின்றி வினியோகம் செய்ய வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ், அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
வளர்ச்சி திட்டப்பணிகள்
குமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட பொதுப்பணித்துறை (கட்டிடம்), நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், நெடுஞ்சாலைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, மீன்வளத்துறை உள்பட பல்வேறு துறைகள் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்தும், முடிவடைந்த பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தூய்மையாக வைத்திருக்க வேண்டும்
வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடித்திட துறைசார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள், ஊராட்சிகளின் வாயிலாக பொதுமக்களுக்கு குடிநீரை தங்கு தடையின்றி வழங்கிட துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. தண்ணீர் கசிவு ஏற்படும் நீர்த்தேக்க தொட்டிகளை உடனடியாக பழுதுபார்த்திடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஊரக பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படின் அந்த பள்ளிகளை ஆய்வு மேற்கொண்டு புதிய வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள ஊரக வளர்ச்சித் திட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
மேலும் வளர்ச்சி பணிகள் செயலாக்கத்தின்போது ஏற்படும் தடைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் ஏதேனும் தடைகள் மற்றும் இடர்பாடுகள் ஏற்படின் அதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் உறிஞ்சு குழிகள் அமைக்கவும், குப்பைகளை உரமாக மாற்றவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நகராட்சி பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தவும், மீன்சந்தை உள்ளிட்ட பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். நெடுஞ்சாலைகள் துறை சார்பில் நடைபெற்று வரும் சாலை பணிகள், பாலப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, உதவி கலெக்டர் (பயிற்சி) ராஜட் பீட்டன், மகளிர் திட்ட இயக்குனர் பீபீ ஜாண் மற்றும் அனைத்து துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.