உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறுத்தப்பட்டதால் பரபரப்பு


உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறுத்தப்பட்டதால் பரபரப்பு
x

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூர் அருகே வேப்பிலைபட்டியில் உள்ள கங்கை அம்மன் கோவில் சம்பந்தமாக இரு தரப்பினரிடையே முரண்பாடு இருந்து வந்தது. மாசி மாதம் சிவராத்திரி அன்று சாமி கும்பிடுவதற்காக வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அறநிலைத்துறை வழிகாட்டுதலின்படி இருதரப்பினரும் முறையே சாமி கும்பிடுவது என முடிவெடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவில் உண்டியல் எண்ணும் பணியின் போதும் முறையான தகவல் தெரிவித்து இரு தரப்பினர் மற்றும் வேப்பிலைபட்டி கிராம பொதுமக்கள் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடக்க வேண்டும் என கோட்டாட்சியர் அனிதா தெரிவித்திருந்தார். இதில் ஒரு தரப்பினர் யாருக்கும் அறிவிப்பு தெரிவிக்காமல் உண்டியலை திறந்து காணிக்கை எண்ணும் பணியை தொடங்கினர். உடனே தகவலறிந்து வந்த மற்றொரு தரப்பினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கூடி உண்டியல் காணிக்கை எண்ணும் பணியை தடுத்து நிறுத்தி முறையான அறிவிப்பு கொடுத்து மற்றொரு நாள் காணிக்கை என்னும் பணி நடைபெற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கோரிக்கையை ஏற்று இருக்கன்குடி கோவில் உதவி ஆணையர் கருணாகரன் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியை நிறுத்திவிட்டு பின்னர் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார். பின்னர் உண்டியலில் இருந்து எடுக்கப்பட்ட பணம் மற்றும் நகைகள் அனைவரின் முன்னிலையில் திரும்ப உண்டியலில் செலுத்தப்பட்டது. அப்போது மண்டல துணை வட்டாட்சியர் ராஜாமணி, வருவாய் ஆய்வாளர் குருநாதன், கிராம நிர்வாக அலுவலர் விஷ்ணுபிரியா, போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலு, சப்-இன்ஸ்பெக்டர் ரேவதி மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story