மாநகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் திரண்டதால் பரபரப்பு
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் அண்ணாசாலையில் பழைய மாநகராட்சி எதிரே மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இங்கு வாடகை முறையாக செலுத்தவில்லை என்பதால் அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் இந்த கடைகளுக்கு ஏலம் நடைபெறும் என்றும் மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கடைகள் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே மாநகராட்சி இந்த கடைகளுக்கான ஏலத்தை நிறுத்த வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த கோரிக்கை குறித்து வேலூர் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாவட்ட தலைவர் ஞானவேலு தலைமையில், மாநகராட்சி வணிகர் சங்க பொருளாளர் சரவணமூர்த்தி, நகர செயலாளர் அசோகன் உள்ளிட்ட ஏராளமான வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகத்தில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி மாநகராட்சி மேயர் சுஜாதா, கமிஷனர் ரத்தினசாமியிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.