வேலூர் கோட்டையில் காதல்ஜோடிகளுக்கு அனுமதி மறுப்பு கும்பலாக வந்தவர்கள் விரட்டியடிக்கப்பட்டதால் பரபரப்பு


வேலூர் கோட்டையில் காதல்ஜோடிகளுக்கு அனுமதி மறுப்பு கும்பலாக வந்தவர்கள் விரட்டியடிக்கப்பட்டதால் பரபரப்பு
x

காதலர் தினத்தையொட்டி வேலூர் கோட்டைக்குள் செல்ல காதல்ஜோடிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கும்பலாக வந்தவர்கள் விரட்டி அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

வேலூர்

காதலர் தினத்தையொட்டி வேலூர் கோட்டைக்குள் செல்ல காதல்ஜோடிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கும்பலாக வந்தவர்கள் விரட்டி அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காதலர் தினம்

உலகம் முழுவதும் காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த தினத்தையொட்டி காதலர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர். மேலும் பரிசு பொருட்கள் வழங்கியும் அன்பை பரிமாறிக்கொண்டனர்.

இந்த தினத்தன்று காதலர்கள் சுற்றுலா தலங்களுக்கு சென்று பொழுதுபோக்குவார்கள். இதையொட்டி வேலூர் கோட்டைக்கும் நேற்று ஏராளமான காதல்ஜோடிகள் வந்தனர். இந்த தினம் கொண்டாடுவதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

காதலர் தினத்தன்று காதல் ஜோடிகள் பூங்காவிற்கு வரலாம் என்பதால் அங்கு பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்க போலீஸ் பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி வேலூர் கோட்டையின் நுழைவு வாயிலில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கோட்டைக்கு வந்த பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். கோட்டையை சுற்றிப்பார்க்கவும், கோவிலில் வழிபட வந்தவர்களை மட்டும் உள்ளே அனுப்பினர். கோட்டையை சுற்றிப்பார்க்க வந்த காதல் ஜோடிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் மதில்சுவர் பகுதியில் அமர வந்தவர்களுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

விரட்டி அடிப்பு

கும்பல் கும்பலாக வந்த இளைஞர்கள் கூட்டத்தை போலீசார் விரட்டி அடித்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதை பார்த்த காதல்ஜோடிகள் பலர் திரும்பிச் சென்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

கோட்டை பூங்கா மற்றும் வளாகத்தில் காதல் ஜோடிகள் பலர் அத்துமீறல்களில் ஈடுபடுவதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குடும்பமாக வருபவர்கள், கோவிலுக்கு மற்றும் அருங்காட்சியகத்துக்கு செல்ல விரும்பம் தெரிவித்த ஜோடிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சில ஜோடிகள் பிறந்தநாள் கொண்டாடவும், காதலர் தினத்தை கொண்டாடவும் கேக் வாங்கிக்கொண்டும் வந்தனர். பாதுகாப்பு கருதி அவர்களுக்கும் அனுமதி அளிக்கவில்லை.

இதேபோன்று கோட்டை பூங்கா, பாலமதி, செங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளிலும் ரோந்து பணியிலும், தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story