அரசு இடம் என கூறி அறிவிப்பு பதாகை வைத்ததால் பரபரப்பு
மாங்கோட்டை கிராமத்தில் வேல்குத்தி சாமி கும்பிடுவதற்கு இருதரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. அந்த இடத்தை அரசு இடம் என கூறி அறிவிப்பு பதாகை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேல்குத்தி சாமி கும்பிட மனு
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, மாங்கோட்டை கிராமத்தில் உள்ள இடம் பாதை மற்றும் நடைபாதை என கிராம கணக்குகளில் உள்ளது. இந்த இடத்தில் வேல் குத்தி சாமி கும்பிட அனுமதி வழங்க கோரி மாங்கோட்டை மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன், கறம்பக்குடி தாசில்தாரிடம் மனு கொடுத்தார். இதுகுறித்து கடந்த 24-ந் தேதி சமாதான கூட்டம் நடைபெற்றது. ஆனால் கூட்டத்திற்கு எதிர்தரப்பினர் வரவில்லை.
எதிர்தரப்பினர் வராததால் தாசில்தார் அந்த இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வேல்குத்தி சாமி கும்பிடவும், கொட்டகைகள் அமைக்க கூடாது. யாரேனும் ஆட்சேபனை செய்தால் வருவாய் கோட்டாட்சியரிடம் மேல் முறையீடு செய்து கொள்ளலாம் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
சமாதான கூட்டம்
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்தரப்பினர் மாங்கோட்டை கிராமம் மற்றும் சுற்று வட்டாரங்களிலும், ஆலங்குடி நகரிலும் கடந்த 2-ந் தேதி மாங்கோவில் பஸ் நிறுத்தம் சாலையில் மறியல் நடத்த போவதாக போஸ்டர் ஒட்டினர். இதுகுறித்து ஆலங்குடி போலீசார், கறம்பக்குடி தாசில்தாருக்கு கடிதம் அனுப்பியதன் பேரில் மீண்டும் சமாதான கூட்டம் மாங்கோட்டை மேலப்பட்டியை சேர்ந்த அருணாச்சலம் வகையறாக்கள் 6 தரப்பினரும், கணேசன் வகையறாக்கள் 9 எதிர்தரப்பினரும் என 15 நபர்கள் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
புறம்போக்கு இடம்
ஆனால் கூட்டத்தில் மனுதாரர் தரப்பில் கலந்து கொண்டவர்கள் யாரும் கையொப்பம் இடாமல் புறக்கணித்து சென்றனர். அரசு புறம்போக்கு பாதை மற்றும் நடைபாதை என கிராம கணக்குகளில் உள்ள இடம் அரசுக்கு சொந்தமான இடமாகும். இந்த இடம் கிராம கணக்குகளின் படி நடைபாதை அல்லது பாதை என கிராம கணக்குகளில் இருந்தாலும், பூஸ்திரியில் அவ்வாறாக இல்லை. இதன் அருகில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்கள் அரசு புறம் போக்கு இடத்திலேயே உள்ளது.
அறிவிப்பு பதாகை
தற்போது மேற்படி இடத்தில் வேல் குத்தி சாமிதரிசனம் செய்வதை எதிர் தரப்பினர் ஏற்றுக்கொண்டால் இதை அரசு அனுமதிக்கும். ஆனால் எதிர் தரப்பினர் ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் 24-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட சமாதான கூட்ட முடிவை ரத்து செய்தும்,
மேலும் அந்த இடத்தில் நில அளவை செய்து அரசுக்கு சொந்தமான இடம். இதில் யாரும் அத்துமீறி உள்ளே நுழையக்கூடாது என அறிவிப்பு பதாகை வைப்பததோடு சுற்றி கம்பி வேலி அமைக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. மேலும் அந்த இடத்தில் வருவாய்த்துறையினர் அறிவிப்பு பதாகை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டத்தில் ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர், கறம்பக்குடி தலைமையிடத்து துணை வட்டாட்சியர், மழையூர் சரக வருவாய் ஆய்வாளர், மாங்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.