விசாரணை அதிகாரி அமுதா முன் யாரும் ஆஜராகாததால் பரபரப்பு
விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரி அமுதா முன் நேற்று யாரும் ஆஜராகாததால் பரபரப்பு நிலவியது.
அம்பை:
விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரி அமுதா முன் நேற்று யாரும் ஆஜராகாததால் பரபரப்பு நிலவியது.
பற்கள் பிடுங்கியதாககுற்றச்சாட்டு
நெல்லை மாவட்டம் அம்பை காவல் உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் போலீஸ் அதிகாரிகள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். .
இந்த சம்பவம் தொடர்பாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி தனது அறிக்கையை தாக்கல் செய்து உள்ளார்.
விசாரணை அதிகாரி வருகை
இந்த நிலையில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு முதன்மை செயலாளர் அமுதாவை விசாரணை அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது.
அவர் நேற்று முன்தினம் நெல்லைக்கு வந்து தனது விசாரணையை தொடங்கினார். கலெக்டர் கார்த்திகேயனிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். மேலும் உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் தனது விசாரணை விவரங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
ஆஜராகவில்ைல
இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கவோ, வாக்குமூலம் அளிக்கவோ விரும்புபவர்கள் அம்பை தாலுகா அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அமுதா முன் நேற்று ஆஜராகி விளக்கம் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக அவர் நேற்று காலை 10¼ மணிக்கு தாலுகா அலுவலகத்துக்கு வந்தார். அவர் மாலை 5¼ மணி வரை அங்கு இருந்தார். ஆனால் அவர் முன் யாரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஒருவர்கூட ஆஜராகாதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.