கிரிவலப்பாதையில் தகராறில் ஈடுபட்ட வெளிநாட்டுக்காரரால் பரபரப்பு


கிரிவலப்பாதையில் தகராறில் ஈடுபட்ட வெளிநாட்டுக்காரரால் பரபரப்பு
x

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தகராறில் ஈடுபட்ட வெளிநாட்டுக்காரரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தகராறில் ஈடுபட்ட வெளிநாட்டுக்காரரால் பரபரப்பு ஏற்பட்டது.

வெளிநாட்டை சேர்ந்தவர்தகராறு

திருவண்ணாமலை ஆன்மிக நகரம் மட்டுமின்றி சுற்றுலா நகரமாகவும் விளங்குகிறது. இதனால் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் சுற்றுலா விசாவில் திருவண்ணாமலைக்கு வந்து தங்கி இங்குள்ள கோவில்கள் மற்றும் ஆசிரமங்களுக்கு சென்று வருகின்றனர்.

இதனால் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் வெளிநாட்டினரின் நடமாட்டம் பரவலாக காணப்படும். இந்த நிலையில் நேற்று காலை திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அரசு கலைக்கல்லூரி அருகே வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் அங்கும், இங்கும் சுற்றி திரிந்து உள்ளார். மேலும் அவர் சாலையில் சென்றவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரை மறிந்து மோட்டார் சைக்கிளில் இருந்து சாவியை கையில் எடுத்து கொண்டு தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. அவரை தட்டி கேட்ட ஒருவரின் செல்போனை பறித்து தரையில் போட்டு காலால் மிதித்து சேதப்படுத்தினார்.

கட்டிப்போட்டனர்

அவரை தடுக்க வந்த நபர்களையும் அவர் தாக்க முயன்று உள்ளார். இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த நபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் போலீசாரையும் தாக்க முயன்றார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் போலீசார் அவரை பிடித்து கையை கட்டிப்போட்டனர்.

அதனை தொடர்ந்து் 108 ஆம்புலன்சை வரவழைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் அமெரிக்காவை சேர்ந்தவர் என்பதும், திருவண்ணாமலையில் வாடகைக்கு வீடு எடுத்து கடந்த 3 மாதங்களாக தங்கி வசித்து வந்ததும் தெரியவந்தது.

திடீரென மன நலம் பாதிக்கப்பட்டதால் அவர் அவ்வாறு நடந்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தினால் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story