மத்திய பாதுகாப்பு படை அலுவலகத்தில் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை அலுவலகத்தில் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை அலுவலகத்தில் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு
மதுரை விமான நிலையத்தில் இருந்து உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு தினந்தோறும் 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக 100-க்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவர்களுக்கான அலுவலகம், தங்கும் இடம், ஆயுதங்கள் பாதுகாக்கும் இடம் போன்றவை விமான நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
நேற்று காலை விமான நிலையத்தில் இரவு பணியை முடித்து விட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் துருவ்குமார்ராய், 9 எம்.எம். தோட்டா வகை துப்பாக்கியை அலுவலகத்தில் ஒப்படைத்தார். அப்போது அந்த துப்பாக்கி எதிர்பாராதவிதமாக வெடித்தது. தகவல் அறிந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் அங்கு விரைந்து வந்து பார்த்தனர்.
இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
அதில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக துப்பாக்கி தன்னிச்சையாக வெடித்தது தெரியவந்தது. இதனால் யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை. துப்பாக்கி வெடித்ததால் விமான நிலைய பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதுதொடர்பாக உயர் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அதில் துப்பாக்கியில் இருந்து காலியான தோட்டா வெளியே வந்த சத்தம் தான் கேட்டது என்றும், எதிர்பாராதவிதமாக தான் இந்த சம்பவம் நடந்ததாக கூறியுள்ளார். அதை தொடர்ந்து பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் துருவ்குமார் ராய் கவனக்குறைவால் இந்த சம்பவம் ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்தது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் துருவ்குமார்ராய்யை சென்னையில் உள்ள தொழில்பாதுகாப்பு படை டி.ஐ.ஜி. பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.