கிண்டியில் மின்சார ரெயிலில் திடீரென புகை வந்ததால் பரபரப்பு


கிண்டியில் மின்சார ரெயிலில் திடீரென புகை வந்ததால் பரபரப்பு
x

கிண்டியில் மின்சார ரெயிலில் திடீரென கரும்புகை வந்ததால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கிண்டி,

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில் வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக நேற்று காலை காலை 10.30 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மதியம் 3 மணிக்கு பிறகுதான் மின்சார ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டது. இதனால் மின்சார ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலை மோதியது.

இந்தநிலையில் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி நேற்று மாலை மின்சார ரெயில் வந்து கொண்டிருந்தது. கிண்டி ரெயில் நிலையம் அருகே மெதுவாக வந்த ரெயில், ரெயில் நிலையத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது, நடுவில் உள்ள பெட்டியில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. ரெயில் பெட்டியில் தீப்பிடித்து விட்டதாக நினைத்த பயணிகள் கூச்சலிட்டனர்.

பிரேக் பாயிண்டில் பழுது

உடனடியாக மின்சார ரெயிலை அதன் டிரைவர் நடுவழியில் நிறுத்தி விட்டார். பயணிகள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ரெயிலில் இருந்து கீழே குதித்து அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர். இதனால் கிண்டி ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், ரெயில்வே அதிகாரிகள் விரைந்து சென்று சோதனை செய்தனர். அதில் மின்சார ரெயிலில் பிரேக் பாயிண்டில் ஏற்பட்ட பழுது காரணமாக கரும்புகை வந்தது தெரிய வந்தது.

அவை சரி செய்யப்பட்டு சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் அந்த மின்சார ரெயில் கிண்டியில் இருந்து கடற்கரை நோக்கி புறப்பட்டு சென்றது. இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story