தனியார் ஆலைக்கு அனுப்பிய கரும்புகளை இறக்க விடாமல் தடுத்ததால் அலுவலகத்திற்குள் அதிகாரிகளை சிறை வைத்து பூட்டிய விவசாயிகள் விருத்தாசலம் அருகே பரபரப்பு
விருத்தாசலம் அருகே தனியார் ஆலைக்கு அனுப்பிய கரும்புகளை இறக்க விடாமல் தடுத்த அதிகாரிகளை அலுவலகத்திற்குள் சிறை வைத்து விவசாயிகள் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த மருங்கூர், காவனூர், வல்லியம் உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இந்த கரும்புகளை மஞ்சள் நோய் தாக்கியதால், கரும்பு வளர்ச்சி அடையாமல் அழிந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கரும்பு முற்றிலும் அழிவதற்குள், தங்களது கரும்புகளை வெட்டி, தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்பி உள்ளனர்.
இதனை அறிந்த கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகள், விவசாயிகள் வெட்டி அனுப்பிய கரும்புகளை லாரிகள் மற்றும் டிராக்டர்களில் இருந்து இறக்க கூடாது என்று கூறி விவசாயிகளை தடுத்தனர். இதனால் கரும்புகள் கடந்த 3 நாட்களாக கடும் வெயிலால் வாகனங்களில் இருந்தே காய்ந்து வருகிறது. மேலும் அறுவடை செய்யாத நோய் தாக்கிய கரும்புகளும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.
மறியல் போராட்டம்
இதில் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று விருத்தாசலம் அடுத்த மேலப்பாளையூர், கரும்பு கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். ஆனால் விவசாயிகளின் கேள்விகளுக்கு அதிகாரிகள் உரிய பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த விவசாயிகள், அதிகாரிகளை அலுவலகத்திற்குள் சிறை வைத்து, அலுவலகத்தின் முன் பக்கமும், பின் பக்கமும் உள்ள கதவுகளை பூட்டி போட்டனர். இதனால் அலுவலர்கள், வெளியே வர முடியாமல் தவித்தனர். அந்த சமயத்தில் விவசாயி ஒருவர், விருத்தாசலம்- பவழங்குடி சாலைக்கு சென்று, துணியை விரித்து படுத்துக் கொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதிகாரிகள் விடுவிப்பு
இதுபற்றி அறிந்து வந்த விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தி அலுவலகத்தின் பூட்டை திறந்து அலுவலர்களை விடுவித்தனர்.
அப்போது விவசாயிகள், எங்களது கரும்புகளை வெட்டி தனியார் கரும்பு ஆலைகளுக்கு அனுப்ப அனுமதிக்காவிட்டால் பலகட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று கூறி விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.