பா.ஜனதா-காங்கிரஸ் தொண்டர்கள் போட்டி கோஷம் எழுப்பியதால் பரபரப்பு
பாளையங்கோட்டை மத்திய சிறை முன்பு பா.ஜனதா-காங்கிரஸ் தொண்டர்கள் போட்டி கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாளையங்கோட்டை மத்திய சிறை முன்பு பா.ஜனதா-காங்கிரஸ் தொண்டர்கள் போட்டி கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இருகட்சி நிர்வாகிகளுக்கு ஜாமீன்
நாகர்கோவிலில் கடந்த 3-ந் தேதி பா.ஜனதா கட்சி அலுவலகத்தை, காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட சென்றனர். அப்போது காங்கிரஸ் கட்சியினருக்கும், பா.ஜனதாவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, கல்வீச்சு சம்பவமும் நடந்தது. இதில் இருதரப்பினரும் காயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட முன்னாள் பா.ஜனதா தலைவர் மகாராஜன், கன்னியாகுமரி மாவட்ட தலைவர் தர்மராஜ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், நிர்வாகிகள் டைசன், ஜெனில் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் அவர்களுக்கு கோர்ட்டில் ஜாமீன் வழங்கப்பட்டது.
போட்டி கோஷம்
இந்த நிலையில் நேற்று காலையில் சிறையில் இருந்து வெளியே வரும் நிர்வாகிகளை வரவேற்க நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பாளையங்கோட்டை சிறை முன்பு குவிந்தனர்.
முதலில் சிறையில் இருந்து பா.ஜனதாவினர் 2 பேர் விடுதலையாகி வெளியே வந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சால்வை மற்றும் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். அப்போது அவர்கள், பா.ஜனதா தலைவர்களை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
அதேநேரத்தில் அங்கு காங்கிரஸ் நிர்வாகிகளை வரவேற்க காத்திருந்த காங்கிரசார், அவர்களது கட்சி தலைவர்களை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஒரே நேரத்தில் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சியினர் போட்டி கோஷங்கள் எழுப்பியதால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
பரபரப்பு
இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை மாநகர கிழக்கு போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் 2 கட்சி நிர்வாகிகளையும் சமரசப்படுத்தினர்.
இதன் பின்னர் இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் மற்றும் நிர்வாகிகள் சிறையில் இருந்து வெளியே வந்தனர். அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை மற்றும் சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.