கடையநல்லூரில் தடையை மீறி ஆட்டோ ஓட்டுநர் சங்கம் அமைக்க முயன்றதால் பரபரப்பு
கடையநல்லூரில் தடையை மீறி ஆட்டோ ஓட்டுநர் சங்கம் அமைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தென்புறம் தினசரி மார்க்கெட் மற்றும் முப்புடாதி அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதை உள்ளது. இந்த இடத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் அமைக்க பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போலீசிடம் அனுமதி கேட்டு மனு வழங்கப்பட்டது. ஆனால் போலீசார் போக்குவரத்து நெருக்கடி மற்றும் பள்ளி மாணவிகளின் பாதுகாப்பு கருதி அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில் நேற்று இந்து முன்னணி தொழிற்சங்கம் சார்பில் அந்த இடத்தில் போலீஸ் தடையை மீறி சங்கம் அமைக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து போலீசார் அங்கு இருபுறமும் பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், மார்க்கெட்டுக்கு செல்லும் வியாபாரிகள், பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள். மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.