வீரபாண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி


வீரபாண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
x

வீரபாண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. கேமராவில் பதிவான நபரை போலீஸ் தேடுகிறது.

சேலம்

பனமரத்துப்பட்டி:

சார்பதிவாளர் அலுவலகம்

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே வீரபாண்டியில் பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு பத்திரப்பதிவு அலுவலக பணியாளர்கள் வழக்கம்போல் வேலை முடிந்து அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றனர்.

நேற்று காலை பணியாளர்கள் வந்த போது அலுவலகத்தின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அலுவலகத்தில் இருந்த நோட்டு புத்தகங்கள் மற்றும் பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவும் திறந்து கிடந்தது.

தூக்கி வீசப்பட்ட பணப்பெட்டி

தகவல் அறிந்த ஆட்டையாம்பட்டி போலீசார், சார்பதிவாளர் மணி மற்றும். சேலம் ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி, இன்ஸ்பெக்டர் அம்சவல்லி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணம் வைக்கும் பெட்டி அலுவலக வளாகத்தில் தூக்கி வீசப்பட்டிருப்பதும், பணப்பெட்டியை உடைக்க முடியாததால் திருடன் வெளியில் வீசி சென்று இருப்பது தெரியவந்தது. பணப்பெட்டியில் பணம் ஏதும் வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

ஆவணங்கள் திருட்டு?

இருந்த போதிலும், சார் பதிவாளர் அலுவலகத்தின் முக்கியமான ஆவணங்கள் எவையேனும் திருட்டு போய் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீஸ் மோப்பநாய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மோப்ப நாய் மேகா, சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து வீரபாண்டி நோக்கி ஓடி மீண்டும் அலுவலகம் நோக்கி ஓடி வந்தது.

சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழவைக்கப்பட்டு கைரேகை பதிவு செய்யப்பட்டன. அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் விடியற்காலை 3 மணி அளவில் முகமூடி அணிந்த நபர் ஒருவர், சார்பதிவாளர் அலுவலகத்தில் பூட்டை உடைக்கும் காட்சி பதிவாகி உள்ளது. அந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story