கிராவல் மண் அள்ளிச்சென்ற லாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு


கிராவல் மண் அள்ளிச்சென்ற லாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
x

விராலிமலை அருகே கிராவல் மண் அள்ளிச்சென்ற லாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை

லாரிகள் தடுத்து நிறுத்தம்

திருச்சி காஜாமலை அண்ணா ஸ்டேடியம் அருகே வருகிற 28-ந் தேதி அரசு விழா நடைபெறுகிறது. இதையொட்டி விழா மேடை அமைக்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், விழா மேடை மற்றும் பயனாளிகள் அமரும் பந்தல் அமைப்பதற்கான இடத்தில் கிராவல் மண் நிரப்பி சமன் செய்வதற்காக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் மண்டையூர் ஊராட்சிக்குட்பட்ட வங்காரம்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்திலிருந்து 20-க்கும் மேற்பட்ட லாரிகளிலிருந்து நேற்று காலை கிராவல் மண் அள்ளி செல்லப்பட்டது.

இதைப்பார்த்த வங்காரம்பட்டி மற்றும் சிங்கத்தாக்குறி பொதுமக்கள் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளி திருச்சிக்கு கடத்தப்படுவதாக கருதி ஊர் பட்டயார் முருகன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் காலை 10 மணியளவில் கிராவல் மண் அள்ளி சென்ற லாரிகளை தடுத்து நிறுத்தினர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த மண்டையூர் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முத்துவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் தங்களது நிலத்திலிருந்து மறு பகுதிக்கோ அல்லது வீடு கட்டுமான பணிக்கோ கிராவல் மண் அள்ளி செல்வதற்கு வருவாய் துறையினர் அனுமதி கொடுக்க மறுக்கின்றனர். அவ்வாறு இருக்கும்போது லாரிகளில் எவ்வித அனுமதியும் இன்றி கிராவல் மண் அள்ளி செல்கின்றனர் என்று கூறி லாரிகளை விடுவிக்க மறுத்தனர். பின்னர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து லாரிகளை விடுவித்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story